சென்னை: வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த மே 8ஆம் அசானி புயலாக உருவெடுத்தது. இந்த புயலால் ஆந்திரா - ஒடிசா மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது. அதுமட்டுமல்லாமல், தெலங்கானா, தமிழ்நாடு மாநிலங்களில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனிடையே முன்னெச்சரிக்கையாக சென்னை விமான நிலையத்தில் 17 உள்நாட்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அசானி புயல் காரணமாக, அடுத்த 3 மணிநேரத்தில் தமிழ்நாட்டின் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர், நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்