தமிழ்நாடு முழுவதும் காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சிட்லபாக்கம் புனித தோமையார் மலை அரசு தொடக்கப்பள்ளியில் தேர்தல் ஆணையம் புதுவிதமான ’மாதிரி வாக்குச்சாவடி மையம்’ ஒன்றினை அமைத்துள்ளது.
இந்த வாக்குச்சாவடி மையத்தின் வாயிலில் வாழை தோரணம் கட்டப்பட்டிருந்தது. இந்த மாதிரி வாக்குச்சாவடி மையத்திற்குள் நுழைந்தவுடன் தேர்தல் அலுவலர்கள் சுப நிகழ்ச்சிகளில் வரவேற்பது போன்று பன்னீர் தெளித்து சந்தனம் வழங்கி வரவேற்றனர்.
சிறப்பு அரங்குகள் அமைக்கப்பட்டு வாக்காளர்களின் அடையாள அட்டைகளைப் பரிசோதித்து உரிய வாக்குச்சாவடிக்கு அனுப்பி வைத்தனர். இந்த மாதிரி வாக்குச்சாவடி மையத்தில் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் கொண்டு மருத்துவப் பரிசோதனை அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர்களின் குழந்தைகளை கவர்வதற்காக பந்துகள், பொம்மைகளுடன் கூடிய விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தது இதில் தங்கள் பெற்றோர்கள் வாக்களித்து வரும் வரை சிறுவர்கள் விளையாடி மகிழ்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் வாக்குச்சாவடி மையத்திற்கு உள்ளே பலூன்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. வெயிலின் தாக்கத்தைக் குறைப்பதற்காக ஏர்கூலர் பொருத்தப்பட்டுள்ளது. பல்வேறு வசதிகளைக் கொண்ட இந்த மாதிரி வாக்குச்சாவடி மையத்தில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக சக்கர நாற்காலிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதனுடன் சக்கர நாற்காலிகள் வாக்குச்சாவடி மையத்திற்குள் செல்வதற்காக சாய் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வாக்குச்சாவடி வளாகம் முழுவதும் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் பதாகைகள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்காளர்களின் தாகம் தணிப்பதற்காக குடிநீரும் மோரும் வாக்குச்சாவடி மையத்தில் இலவசமாக வழங்கப்பட்டன.
முழுக்க முழுக்க வாக்காளர்களின் வசதியை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட மாதிரி வாக்குச்சாவடி மையத்தால் மகிழ்ச்சியடைந்த வாக்காளர்கள் மாதிரி வாக்குச்சாவடி மையத்தின் வாயிலில் நின்று செல்பி எடுத்துக் கொண்டனர்.