ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத் தலைமை அலுவலகத்தில் இன்று, அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன், சமக தலைவர் சரத்குமார், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது 3 கட்சிகளுக்குமிடையே, வரும் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல், "இத்தேர்தலில் நாங்கள் தான் முதல் அணி. தேமுதிகவிற்கு எங்கள் கட்சியின் துணைத்தலைவர் பொன்ராஜ் அழைப்பு விடுத்திருப்பது குறித்து தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். இன்னும் அதுகுறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.
மு.க.ஸ்டாலினை நான் விமர்சிப்பதே இல்லை என்றார்கள். தற்போது விமர்சித்தால், பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுகவை ஏன் விமர்சிக்கிறீர்கள் என்கிறார்கள். நான் அடிப்பவர்கள் எல்லாம் என் எதிரிதான். இவர்கள் இருவருமே அப்புறப்படுத்தப்பட வேண்டியவர்கள் தான். நாளை காலை 9:30 மணிக்கு மநீம முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சரத்குமார், "இந்த கூட்டணியின் தலைவர் மட்டுமல்ல முதலமைச்சர் வேட்பாளரும் கமல் ஹாசன் தான். அனைவரும் ஒன்று சேர்ந்தால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றே இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. நல்லவரையும் வல்லவரையும் நம்மவர் வரவேற்பார்" எனத் தெரிவித்தார்.
பிறகு பேசிய ரவி பச்சமுத்து, "இந்தக் கூட்டணியால் தான் தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியும். இளைஞர்கள், படைப்பாளர்கள் என அனைவரும் இந்தக் கூட்டணியில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் விடிவெள்ளியாக இந்தக் கூட்டணி இருக்கும்" என்றார்.
இதையும் படிங்க: முறிந்த அதிமுக-தேமுதிக கூட்டணி! - தொண்டர்கள் கொண்டாட்டம்!