தமிழ்நாட்டில் கரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், செவிலியர், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோரும் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இச்சூழலில் சென்ற வாரம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் கரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் கே. பழனிக்கு, கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது அவர் சென்னை அருகே ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில், "கரோனா வைரஸ் தொற்று காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்ரீபெரும்புதூர் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே. பழனி முழுமையாக நலமடைந்து மக்கள் பணியாற்ற வர வேண்டும் என்று மனதார விரும்புகிறேன். பொதுப்பணியில் இருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.