சென்னை: சென்னை நந்தனம், அரசு ஆடவர் கல்லூரியில் புதிதாக இளங்கலை புள்ளியியல், இளங்கலை வணிகவியலில் கணக்கியல் மற்றும் நிதி, இளங்கலை பொது நிர்வாகம் ஆகிய மூன்று பாடப்பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்குச் சேர்க்கை ஆணைகளை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோர் வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 'தமிழ்நாட்டில் வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. ஏற்கெனவே, ஜனவரி 20ஆம் தேதிக்குப் பின் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட கல்லூரி தேர்வுகள் தள்ளி வைக்கப்பட வாய்ப்புகள் இருக்கின்றன.
ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு நடத்தப்படும் தேர்வு தரமானதாக இருக்கிறதா என்பது சந்தேகமாக உள்ளதால் நேரிடையாக மட்டுமே தேர்தல் நடத்தப்படும்' எனத் தெரிவித்தார்.
மேலும், மாணவர்கள் படிப்பதற்காக விடுமுறை வழங்குவதையும் முதலமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் என்று அவர் கூறினார்.
15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்குத் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறினார். கல்லூரி மாணவர்களுக்கு ஏற்கெனவே தடுப்பூசிப் போடும் பணிகள் தொடங்கப்பட்டுப் போடப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட கல்லூரிகளில் மாணவர்களுக்குக் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்படும் போது, அங்கேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் என்றும்; நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவது குறித்து ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
மேலும், நீட் தேர்வுக்கு எதிராக திமுக தொடர்ந்து போராடும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிகரிக்கும் கரோனா..மேலும் கட்டுப்பாடுகள்?...முதலமைச்சர் முக்கிய ஆலோசனை!