சென்னை: சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நேற்று (மே 26) பிரதமர் மோடி ரூ.31,530 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டினார். பழைய விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வழியனுப்பி வைத்தபின் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பிரதமர் மோடி தமிழ்நாடு மக்களுக்காக ரூ.31 ஆயிரம் கோடிக்கும் மேல் நலத் திட்டங்களை தொடங்கி வைத்தார். புதிய இந்தியா, புதிய ஒரு தமிழ்நாட்டை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட திட்டங்கள். அடுத்த கட்ட தமிழ்நாட்டை உருவாக்க பிரதமர் மோடி வந்தார்.
ஒரு மாநில முதலமைச்சர் எப்படி நடந்து கொள்ளக்கூடாது என்பதற்கு மு.க.ஸ்டாலின் நடந்து கொண்டது ஒரு சான்று. பிரதமர் வந்தது பாஜக நிகழ்ச்சி அல்ல. தமிழ்நாடு மக்களுக்கு திட்டங்களை தர வந்திருந்தார். பிரதமர் மோடியை மேடையில் வைத்து கொண்டு அரசியல் நாடக அரங்கத்தை நடத்துவதில் திமுகவிற்கு கைவந்த கலை. போட்டி போட்டு கொண்டு முதலமைச்சர் பேசி உள்ளார். கச்சத்தீவை தாரை வார்த்து இலங்கைக்கு தந்துவிட்டு என்ன தைரியத்தில் மீட்டு தர வேண்டும் எனக் கேட்கிறார். கச்சத்தீவை மீட்டு தர வேண்டும் என தமிழ்நாடு மக்களுக்கு உரிமை உண்டு. ஆனால் மு.க.ஸ்டாலின் குடும்பத்திற்கு உரிமை கிடையாது. சரித்தரத்தை மறைத்து விட்டு பேசுகிறார்.
இந்தியா எவ்வளவு கஷ்டப்பட்டு இலங்கைக்கு உதவி கொண்டு இருக்கிறது. இலங்கை தமிழ் மக்களுக்கு உதவி செய்வது பற்றி பிரதமர் பேசுகிறார். அரசியல் நாடகத்தை நடத்துவதற்காக முதலமைச்சர் சரித்திரம் புரியாமல் பேசுகிறார். ஜிஎஸ்டி குறித்து எதுவும் தெரியாமல் முதலமைச்சர் பேசியது தமிழ்நாட்டிற்கு அவமதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஜிஎஸ்டி கவுன்சில் சேர்ந்து முடிவு செய்து தான் மாநிலங்களுக்கு பணம் வருகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தமிழ்நாட்டிற்கு ஜிஎஸ்டி பணத்தை நிறுத்த வேண்டும் என நினைத்தாலும் முடியாது. யாரோ எழுதி தந்ததை பிரதமர் முன் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு ரூ.25,979 கோடி கொடுக்க வேண்டி இருக்கிறது. எப்போதாவது கேட்டு இருக்கிறார்களா. மாநில அரசுகளுக்கு பணம் தரவேண்டியது ஜிஎஸ்டி கவுன்சில் தான். ஆனால் மத்திய அரசுக்கு தர வேண்டிய பணத்தை பற்றி முதலமைச்சர் மேடையில் பேசி இருக்கலாமே. முதலமைச்சர் மேடையில் பேசிய அனைத்துமே பொய். முன்னுக்கு பின் முரணான தகவலை பேசிவிட்டு திராவிட மாடல் என முதலமைச்சர் கூறினார்.
கொள்கை அடிப்படையில் பாஜகவிற்கு திமுக விரோதி. ஆனால் முதலமைச்சரை மதிப்போம். பிரதமர் மோடியை மேடையில் வைத்துக் கொண்டு முதலமைச்சர் நடந்து கொண்ட விதம் தமிழ்நாடு சரித்திரத்தில் கரும்புள்ளி. முதலமைச்சர் பேசியதற்கு பாஜக விளக்கமாக அறிக்கை தரப்படும். தைரியம் இருந்தால் தமிழ்நாடு நிதி அமைச்சர் ரூ.25 ஆயிரம் கோடி மத்திய அரசுக்கு தர வேண்டியது இல்லை என சொல்லட்டும்.
கச்சத்தீவை எப்படி கொண்டு வர வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். திமுக எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம். 2009ஆம் ஆண்டு காங்கிரசுடன் திமுக பேசியதை வெளியே சொல்ல வேண்டுமா. இலங்கை தமிழர்களின் முதல் விரோதி திமுக தான். பிரதமர் விமானம் செல்லும் வரை எதுவும் பேசக்கூடாது என்று இருந்தேன். தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் முதலமைச்சர் செய்த தவறை மக்கள் கேட்க வேண்டும். தமிழர் உரிமைகளை காக்க, பொய் கும்பலிடம் இருந்து மக்களை காக்க பாஜக நிற்கும். 31ஆம் தேதி கோட்டையை முற்றுகையிடுவோம். முதலமைச்சரிடம் தேர்தல் வாக்குறுதியை தான் கேட்கிறோம்" இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: 'தமிழ் மொழியையும், கலாசாரத்தையும், மேம்படுத்த இந்திய அரசாங்கம் முழு அர்ப்பணிப்புடன் இருக்கிறது' - பிரதமர் மோடி!