காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முற்பகல் 11:25 மணிக்கு நீர் திறந்து வைத்தார். பின்னர் அவர் நீரில் மலர்களைத் தூவி வரவேற்றார். அணை வரலாற்றில் 1934ஆம் ஆண்டு முதல் இதுவரை 87 முறை அணை திறக்கப்பட்டுள்ளது.
இன்று 88ஆவது முறையாக மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதன் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்கள் பயன்பெறுகிறது.
இந்நிகழ்விற்கு பின் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், காவரி டெல்டாவில் சாகுபடி பரப்பை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிப்பதே அரசின் நோக்கம் என்றும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி உணவுத்துறையில் தமிழ்நாடு சாதனை படைக்கும் எனவும் தெரிவித்தார். மேலும் கரோனா தொற்று குறைந்ததால்தான் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறது என்றும் கூறினார்.
இதையடுத்து இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள முதலமைச்சர், "மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக 3000 கன அடி நீரைத் திறந்துவிட்டுள்ளேன். வரும் மாதங்களிலும் தேவைக்கு ஏற்ப வழங்கப்படும். உழவர்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்திட வேண்டும்! தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாம் டெல்டா செழித்தால் தமிழ்நாடே செழிப்படையும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மேட்டூர் அணை திறப்பு: மலர்த் தூவி வரவேற்றார் ஸ்டாலின்