மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செக்காணூரணியை அடுத்த புள்ளநேரி கிராமத்தில் 31 நாள் ஆன பெண்குழந்தையை பெற்றோரே கள்ளிப்பால் கொடுத்து கொன்று புதைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
முழு நாகரீக வளர்ச்சியை எட்டியுள்ள இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் சமுதாய வளர்ச்சிக்கு கேடு விளைவிக்கும் விதமாக இச்சம்பவம் நிகழ்ந்திருப்பது அனைவரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அதில், "பெண்மையைப் போற்றும் தமிழ்நாட்டின் பண்பாட்டுப் பெருமைக்கு அவமானமாக மீண்டும் பெண்சிசுக் கொலை தலைதூக்குவது வேதனை அளிக்கிறது. இச்சம்பவம் இதயம் உள்ளோர் அனைவரையும் பதற வைக்கிறது" என்று வேதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அந்த பதிவின் கீழ், "கண்டனத்திற்குரிய இச்செயலில் ஈடுபட்டோர், துணைநின்றோர் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும். தமிழ்நாடு பெண்களுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாகி வரும் நிலையில், பெண்குழந்தைகள் பாதுகாப்புநாள் கொண்டாடும் ஆட்சியாளர்கள் ஏட்டளவில் இல்லாமல் நடைமுறையில் பெண்சிசுக்களை பாதுகாக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பெண் குழந்தைக்கு கள்ளிப்பால்! பெற்றோரின் கொலைவெறி!