ஜம்மு - காஷ்மீரில் 370ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அம்மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அம்மாநில முன்னாள் முதலமைச்சர்களான ஃபருக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல், பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
கடந்த மார்ச் 13ஆம் தேதி ஃபரூக் அப்துல்லா வீட்டுக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து உமர் அப்துல்லா நேற்று விடுவிக்கப்பட்டார். கரோனா தொற்று பரவிவரும் இத்தகைய சூழ்நிலையில் மெகபூபாவையும் விடுதலை செய்ய வேண்டும் என உமர் அப்துல்லா கோரிக்கை வைத்திருந்தார்.
இதனிடையே, உமர் அப்துல்லா விடுவிக்கப்பட்டது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ”கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக நாடே போராட தயாராகிவரும் சூழ்நிலையில், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள மெகபூபா முப்தி உள்ளிட்டவர்களையும், சிஏஏ போராட்டத்தில் கைதானவர்களையும் மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மெகபூபா முஃப்தியை உடனடியாக விடுவியுங்கள் - உமர் அப்துல்லா கோரிக்கை