இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”குளறுபடிகளாலும், நிர்வாக சீர்கேட்டாலும் மருத்துவர்கள், செவிலியர், காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட கரோனா போரின் முன்கள வீரர்களாகச் செயல்படுவோருக்கே பரவலாக நோய்த்தொற்று ஏற்படும் மோசமான நிலையை உருவாக்கியுள்ளது எடப்பாடி அரசு.
தற்போது தமிழ்நாட்டில் சமூகத் தொற்றை எதிர்கொண்டிருக்கிறோமோ என்ற ஆபத்தான சூழலில், அதற்குப் பொதுமக்கள் மீதும் வணிகர்கள் - தொழிலாளர்கள் மீதும் பழிபோட்டுத் தப்பிக்க நினைக்கிறார்கள்.
மாவட்ட ஆட்சியர்களுடன் நடத்திய ஆலோசனை குறித்து மக்களிடம் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோயம்பேடு காய்கறிச் சந்தையில் மக்கள் நெரிசல் ஏற்பட்டு, நோய்த்தொற்று பரவியதற்கு, சந்தையை இடம் மாற்றம் செய்ய வியாபாரிகள் ஒத்துழைக்கவில்லை எனப் பழியைத் தூக்கி வணிகர்கள் மீது போட்டுள்ளார்.
அவசரகதியிலான முழு ஊரடங்கு அறிவிப்பும், அவகாசம் இல்லாத காரணத்தால் கோயம்பேடு சந்தை உள்ளிட்ட இடங்களில் வணிகர்களும், மக்களும் கூடும் இடங்களில் போதிய பாதுகாப்பு - அமலாக்க நடவடிக்கைகளை முன்கூட்டியே திட்டமிட்டு மேற்கொள்ளத் தவறிய அதிமுக அரசின் நிர்வாக அலட்சியமுமே நோய்த்தொற்று பரவுதலுக்கு அடிப்படைக் காரணமாகும்.
50 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கால் உழன்று கொண்டிருக்கும் மக்களை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்து, அவர்தம் வாழ்க்கைக்கும், வாழ்வாதாரத்திற்கும் உற்ற வழி காண்பதைப் பற்றி இனியாவது அவர் சிந்திக்க வேண்டும். அவர்களுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் நிவாரணமாகத் தர வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:’கோயம்பேடு கரோனா பரவலுக்கு தமிழ்நாடு அரசுதான் காரணம்’