வடசென்னைக்குட்பட்ட திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் சங்கர், ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் ஐட்ரீம் மூர்த்தி, ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் எபினேசர், துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் சேகர் பாபு, மாதவரம் பகுதியில் போட்டியிடும் சுதர்சனம், பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் ஆர்.டி.சேகர், திருவிக நகர் தொகுதியில் போட்டியிடும் தாயகம் கவி, எழும்பூர் தொகுதியில் போட்டியிடும் பரந்தாமன் ஆகியோரை ஆதரித்து ராயபுரம் மேற்கு மாதா கல்லறை சாலையில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் முக ஸ்டாலின் கலந்துகொண்டு வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போதுபேசிய ஸ்டாலின், “கடந்த 15 நாட்களாக மாவட்டம் மாவட்டமாக சென்று வருகிறேன். எப்போதும் உங்களுடன் இருக்கும் ஸ்டாலின் தான் உங்களைத் தேடி வந்திருக்கிறேன். தேர்தல் நேரத்தில் மட்டுமல்லாம் அனைத்து நேரத்தில் நான் உங்களைத் தேடி வந்துள்ளேன். உங்களின் சுக, துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் உங்களில் ஒருவனான நான் திமுகவிற்கு வாக்கு கேட்டு, திமுக தொடங்கிய ராயபுரத்திற்கு வந்துள்ளேன்.
அமைச்சர் ஜெயகுமாரை ஓட ஓட விரட்டவே இங்கு வந்துள்ளேன். அவரை சாதாரண தோல்வி அல்ல, படுதோல்வி அடைய செய்யவே நான் இங்கு வந்துள்ளேன். 2011ஆம் ஆண்டு ஜெயக்குமாரை, ஜெயலலிதா சபாநாயகர் ஆக்கினார். ஆனால் சொத்துகுவிப்பு வழக்கில் சிக்கியபோது, ஜெயகுமார் வருங்கால முதலமைச்சர் எனப் போட்டுக் கொண்டு சபாநாயகர் பதவியை இழந்தார். இதேபோல் முந்திரி கொட்டையாக செயல்பட்ட அவர், தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு பிஆர்ஓவாக செயல்பட்டு வருகிறார். மைக்கைப் பார்த்தால் பேசும் ஜெயகுமார், மக்களைப் பார்த்தால் பேசமாட்டார்.
சிஏஏவை ஆதரித்து பாராளுமன்றத்தில் வாக்களித்து, தற்போது பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளனர். அவர்களுக்கு பிரச்சாரம் செய்ய வக்கும் இல்லை துப்பும் இல்லை. மேலும், அதிமுகவினரின் ஊழல், நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் திமுக ஆட்சிக்கு வந்த உடன் உடனடியாக விசாரணைக்கு எடுக்கப்படும். ராயபுரத்தில் மீனவர்கள், பொதுமக்கள் நலனுக்கான எந்தத் திட்டத்தையும் ஜெயக்குமார் செய்ததில்லை.
தற்போது எடப்பாடி பழனிசாமி பேசுவதைப் பார்த்தால் நமக்கே சிரிப்பு வருகிறது. உழைத்து உழைத்து அவர் முன்னுக்கு வந்ததாகக் கூறி வருகிறார். ஆனால் அவர் ஊர்ந்து, ஊர்ந்து, காலில் விழுந்து காலில் விழுந்து தான் பதவி வாங்கினார். அது இல்லை என நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி தயாரா? ஸ்டாலினின் உழைப்பைப் பற்றி திமுக தொண்டர்களுக்குத் தெரியும். ஓய்விற்கே ஓய்வு கொடுத்து உழைத்த கலைஞரின் மகன் நான். கலைஞரே ஸ்டாலினுக்கு கொடுத்த பதவி உழைப்பு, உழைப்பு, உழைப்பு தான்” என்றார்.
இதையும் படிங்க...ஐநா மன்றத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க மா.கம்யூ. வலியுறுத்தல்