மத்திய அரசு அண்மையில் 3 வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. இச்சட்டங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிப்பதாகக் கூறி பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டக்களமாகியுள்ளன. இந்நிலையில், இதனைக்கொண்டு வந்த மத்திய அரசையும், அதற்கு ஆதரவளித்து வரும் மாநில அதிமுக அரசையும் கண்டித்து, தமிழ்நாட்டிலும் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து, காந்தியடிகளின் பிறந்த நாளான இன்று(அக்.2) ஆண்டுதோறும் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில், இந்த 3 வேளாண் சட்டங்களையும் எதிர்க்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றிட அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களையும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருந்தார். இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக இன்று நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நேற்றிரவு திடீரென அறிவித்தனர்.
இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் இயற்ற வேண்டும் என்ற எனது கோரிக்கைக்கு, அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே, அவர்களும் வேளாண் சட்டங்களை எதிர்த்து கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளதை அறிந்து அஞ்சிய அதிமுக அரசு, கூட்டத்தையே இன்று ரத்து செய்திருக்கிறது.
உள்கட்சியில் முதலமைச்சர் வேட்பாளர் பிரச்னையில் இருந்து மீளமுடியாத முதலமைச்சர் பழனிசாமி, ஊராட்சி மன்றங்களின் ஜனநாயகக் குரலை நெறிக்க கரோனா என்று அலறுகிறார். இருப்பினும் திமுக ஊராட்சி மன்றத்தலைவர்கள் திட்டமிட்டபடி, கிராம சபைக் கூட்டங்களை நடத்தி, மத்திய அரசுக்கு பயந்து விவசாயிகளை அடிமையாக்கியுள்ள அதிமுக அரசின் வஞ்சகத்தை மக்களிடம் எடுத்துரைத்து தங்கள் கடமையை நிறைவேற்றிட வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அனைத்து மாவட்டங்களிலும் கிராம சபைக் கூட்டம் ரத்து - தமிழ்நாடு அரசு