சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசு, சிறப்பு அந்தஸ்து வழங்க உள்ளது. இதனால் மத்திய அரசின் நிதி கிடைத்தாலும், இதனால் மாநில அரசு, பல்கலைக்கழகத்தின் பல்வேறு விவகாரங்களில் முடிவு செய்ய முடியாத நிலை உருவாகும் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
இந்த விவகாரத்தில், துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார். அவரை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என திமுக தரப்பில் கோரிக்கைவைக்கப்பட்டு வருகின்றது. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதை எதிர்த்தும், சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பாக தமிழகம் முழுதும் ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், இன்று (அக். 16) தருமபுரி மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வழங்கு சிறப்பு அந்தஸ்து மூலம் இடஒதுக்கீடு முறைக்கு பாதிப்பு ஏற்படலாம் எனவும், சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இதனைக் குறிப்பிட்டு திமுக தலைவர் ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், அமைச்சர் இப்படி பேட்டி கொடுப்பதைவிட தமிழ்நாடு அரசின் முடிவை மத்திய அரசுக்கு கடிதம் வாயிலாக வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
அரசின் கொள்கை முடிவில் தலையிட்டு தன்னிச்சையாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி பிரச்னையை உருவாக்கிய துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய, வேந்தரான ஆளுநருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் பரிந்துரை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அரசியலில் திமுக - அதிமுக எதிரும் புதிருமாக இருந்தாலும், தேவையான ஒன்றை இதுபோன்று பாராட்டுவது, வரவேற்பது நல்ல அரசியல் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா ஆளுநர் ஆட்சியா? ராமதாஸ் கேள்வி