சென்னை: கலைவாணர் அரங்கத்தில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, "தேவநேயப்பாவாணர் குடும்பம் வறுமையில் இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனால் அவரது, பேத்தியை அழைத்து உரிய உதவியை வழங்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து, அவர், பொது நூலகத்தில் பணியாற்றி வந்த நிலையில், அந்தப் பணியை வயது காரணமாக தொடர முடியவில்லை. இதனால் அவருக்குத் தேவையான உரிய உதவிகள் வழங்கப்பட்டன.
முன்னதாக மறைமலை அடிகளாரின் குடும்பம் வறுமையில் இருந்த காரணத்தை அறிந்து, அவரது பேரனுக்கு அரசு வேலையை முதலமைச்சர் வழங்கினார். தமிழ் வளர்ச்சித்துறையின்கீழ் தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களுக்கு இடர்பாடுகள் வந்தால், அவர்களுக்கு இந்த அமைச்சரவை உதவும்" என்று கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய தங்கம் தென்னரசு, "முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு முரண்பாடாக உள்ளது. கோடநாடு விவகாரத்தை சட்டப்பேரவைக்குள் முதலில் கொண்டு வந்தது, அதிமுக தான். கோடநாடு பங்களா என்பது முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும், அங்கு அரசே இயங்கியது எனவும் பல முறை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவே கூறியுள்ளார்.
அப்படி முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. அது எப்படி முத்தியத்துவம் அல்லாத விவாதமாக இருக்கும்? அவர் பதற்றத்தில் மாற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. சட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பில் இருக்கும் முதலமைச்சர் இந்த விவகாரம் குறித்து பேசக் கூடாது என்று கூறுகிறார்.
ஜெயக்குமார், அவைத் தலைவராக இருந்தவர். சட்ட அமைச்சராகவும் இருந்தவர். அடிப்படை விஷயம் கூட தெரியாமல் பேசுகிறார்.
இந்த வழக்கு மறு விசாரணை அல்ல, மேல் விசாரணை தான் நடைபெறுகிறது. இதில் எவ்வித அரசியல் காழ்ப்புணர்ச்சியும் இல்லை" என்று தெரிவித்தார்.