சென்னை: சைதாப்பேட்டையில் 17ஆவது மெகா தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழ்நாட்டில் முதல் தவணை தடுப்பூசி 86.22 சதவீதம் போடப்பட்டுள்ளது. சென்னையில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் ஐந்து லட்சத்துக்கு மேல் உள்ளனர். அவர்களில் மீனவ மக்கள் அதில் அதிகமாக உள்ளனர். தமிழ்நாட்டில் தொற்றின் அளவு உலக அளவில் மிக வேகமாக பரவி வருகிறது.
உச்சத்தை தொட்ட பாதிப்பு
2021 ஏப்ரல் 29ஆம் தேதி உலக அளவில் அதிகமாக ஒன்பது லட்சத்து நான்காயிரம் பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் தான் உலக அளவில் 18 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால் இந்த மூன்றாவது அலை உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளதை போல் டெல்டா, ஒமைக்ரான் சேர்ந்து சுனாமி அலைக்கு இணையாக கரோனா பாதிப்பு உலகை ஆட்டுவித்து வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிராவில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நேற்று 1489 பேருக்குக் கண்டறியப்பட்டுள்ளது. அனைவரும் முககவசம் அணிய வேண்டும், தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
15 வயதைக் கடந்தவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி
தமிழ்நாட்டில் 15 முதல் 18 வயதிற்குள்பட்ட மாணவர்களுக்கு 33 லட்சத்து 20 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் சைதாப்பேட்டை மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைக்கிறார். 15 வயதைக் கடந்தவர்களுக்கு நாளை தடுப்பூசி போடப்படும். அனைத்து பள்ளிகளிலும் முகாம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நான்கு லட்சம் பொறியியல் மாணவர்கள் தடுப்பூசி செலுத்தியவர்கள். முதல் தவணை 44 சதவீதமும், இரண்டாவது தவணை 18 சதவீதம் செலுத்தி உள்ளனர். முன் களப்பணியாளர்களுக்கு ஜனவரி 10ஆம் தேதி பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைப்பார்.
கோவிஷீல்ட், கோவேக்சின் அதில் எதை பூஸ்டராக செலுத்த வேண்டும் என மத்திய அரசு இரண்டு நாளில் தகவல் தெரிவிக்கும். அதன் அடிப்படையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும்.
விரைவாக குணமாகும் ஒமைக்ரான் தொற்று பாதித்தவர்கள்
தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலையின் போது மே 21ஆம் தேதி 36,184 பேருக்கு தமிழ்நாட்டில் உச்ச அளவை தொட்டது. தமிழ்நாட்டில் ஒமைக்ரான் வைரஸ் சிகிச்சை பெறுபவர்களுக்கு மூன்று நாளில் நெகட்டிவ் வருகிறது.
ஒமைக்கரான் தொற்று உள்ளவர்களைத் தொடர்ந்து 7 நாள்களாகக் கண்காணித்து வருகிறோம். அவர்களுக்கு மூன்று நாள்களில் நெகட்டிவ் வந்து விடுகிறது. ஐந்து நாள் சிகிச்சை பெற்றால் போதும், வீட்டு கண்காணிப்புக்கு அனுப்பலாம் எனத் திட்டமிட்டுள்ளோம். மருத்துவமனையில் இருப்பவர்களை இரண்டு முறை பரிசோதித்து, நெகட்டிவ் வந்தால் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
மேலும், ஒமைக்கரான் தீவிர சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு மருத்துவமனையிலும், லேசான அறிகுறி இருப்பவர்களுக்குத் தனிமைப்படுத்தும் மையங்களிலும், வீட்டிலும் சிகிச்சை அளிக்கத் திட்டமிட்டுள்ளோம். தொற்று ஏற்படும் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும்.
தயார் நிலையில் படுக்கைகள்
மருத்துவ கருவிகளை இங்கிலாந்து அரசே வழங்கி வருகிறது. Virtual மானிடர் செய்கிறார்கள். அதன் படி சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொற்று அதிகரித்தால் வீட்டிலேயே சிகிச்சை தர நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் தொற்றின் எண்ணிக்கை கூடுதலாக அதிகரித்தால், இரண்டு தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டவர்களுக்கு வீட்டிலும், இரண்டு தடுப்பூசி செலுத்தாதவர்களைத் தனிமைப்படுத்தும் மையங்களிலும், தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
பொங்கலுக்கு பின்னர் தொற்று வேகம் அதிகரித்தால், தமிழகத்தில் virtual மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். டெல்டாவின் பாதிப்பு அதிகமாக இருந்தது. ஒமைக்ரான் பரவிய பலர் குறைந்த பாதிப்போடு இருப்பதால் சிகிச்சை முறைகள் மாற்றி அமைக்கப்படும். ஈஞ்சம்பாக்கம், மஞ்சம்பாக்கம் போன்ற இடங்களில் 1000 மருத்துவ படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. நந்தம்பாகத்தில் வர்த்தக மையத்தில் 800 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளன.
பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நடைபாதையைப் பயன்படுத்தலாம். தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டில் தொடர்ந்து தொற்று அதிகரித்து வருகிறது.
மூன்றாவது அலை
தமிழ்நாட்டில் இதுவரை கரோனா தொற்று விதிமுறைகளைப் பின்பற்றாதவருக்கு 105 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று உறுதியானால் பதற்றம் அடைய வேண்டாம்.
மாஸ்க் போடவில்லை என்றால் 10 நாள்களில் தொற்றின் பாதிப்பு பல மடங்கு அதிகரிக்கும்” என்றார். தொடர்ந்து, தமிழ்நாட்டில் மூன்றாவது அலை தொடங்கியதா என்கிற கேள்விக்கு, மூன்றாவது அலை தொடங்கியது என வைத்துக் கொள்ளுங்கள்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு