சென்னை: சட்டப்பேரவையில் இன்று (மே 06) வினாக்கள் விடைகள் நேரத்தில், குளச்சல் தொகுதியிலுள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு நவீன தங்கும் விடுதி கட்ட அரசு ஆவன செய்யுமா என குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, 'மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோயில் 10 நாட்கள் மாசி கொடை விழா சிறப்பாக நடைபெறும் என்றும், அந்த விழாக்களின் போது அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் வருவதால் அவர்களின் வசதிக்காக நடப்பு ஆண்டில் 12 தங்கும் அறைகள் ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அடுத்தாண்டு கூடுதல் கட்டடங்கள் கட்டப்படும் எனவும் கூறினார்.
மேலும், 35 கழிவறைகள் பயன்பாட்டில் உள்ளதாக குறிப்பிட்ட அவர், கூடுதல் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தித் தருவதோடு, கடற்கரையில் குளித்து வரும் பக்தர்களுக்கு மாற்று உடை அணிவதற்கான ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பகவதி அம்மன் கோயில் நவராத்திரி விழா - ஒரு டன் பூக்கள் தூவி இலங்கை பக்தர்கள் வழிபாடு !