மாற்றுத் திறனாளிகளுக்கு தேவைப்படும் சிறப்பு கவனத்தை விரைவாக கண்டறிதல் என்ற தலைப்பில் அமர் சேவா சங்கத்தின் சர்வதேச மாநாடு தேனாம்பேட்டையில் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் முன்னோட்ட நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா கலந்துகொண்டார்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சரோஜா, ” மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2019-2020 ஆம் நிதியாண்டில் மட்டும் 572 கோடி ரூபாய் மாற்றுத் திறனாளிகள் துறைக்கு அரசு ஒதுக்கியுள்ளது. மாற்றுத் திறனாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மாற்றுத் திறனாளிகள் ஆதரவு இல்லம் வைத்து நடத்துவோர், அனைத்து வசதிகளுடனும் முறையான உரிமம் பெற்று பதிவு செய்தால் மட்டுமே அவர்கள் ஆதரவு இல்லம் நடத்த அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல் தனியார் தொண்டு நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகள் ஆதரவு அமைப்பு அமைப்பதற்கு அரசு நிதி உதவியும் செய்து வருகிறது எனக் கூறியுள்ளார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சரோஜா, ”அதிநவீன மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சக்கர வாகனங்கள், 2000 நபர்களுக்கு விரைவில் வழங்கப்படும். குழந்தை பிறந்தவுடன் அதன் திறனை அடிப்படையாகக் கொண்டு, குழந்தை மாற்றுத் திறனாளி குழந்தையா என்பதை கண்டறியும் வகையில் அரிமா சங்கத்துடன் இணைந்து ரூ.2 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் பரிசோதனை செய்யப்படும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே ரூ.313 கோடி செலவில் மாற்றுத் திறனாளிகள் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மாற்றுத் திறனாளிகளை சாதாரண மனிதர்கள் போல் சமமாக பாவித்து அவர்களுக்குத் தேவையான நடவடிக்கைகளையும் அரசு உரிய முறையில் எடுத்து வருகிறது” எனத் தெரிவித்தார்.