சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நேற்று (டிசம்பர் 2) ஒரேநாளில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் சம்பந்தமாகத் தமிழ்நாட்டில் உள்ள சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் 11 அதிக ஆபத்து உள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கும், குறைந்த ஆபத்து உள்ள நாடுகளிலிருந்து வருகைபுரிந்தவர்களுக்கும் உடல் வெப்ப பரிசோதனை, ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதைப் பார்வையிட்டார்.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் ஆய்வு முடித்தபின் செய்தியாளரிடம் மா. சுப்பிரமணியன் கூறியதாவது, "ஒமைக்ரான் புதிய உருமாறிய வைரஸ் பரவல் சம்பந்தமாகத் தமிழ்நாட்டில் இருக்கும் பன்னாட்டு விமான நிலையங்களில் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றன.
உலக நாடுகளில் பாதிப்பு
ஒமைக்ரான் வைரஸ் பரவல் குறிப்பாகத் தென் ஆப்பிரிக்கா, போஸ்ட்வானா, ஹாங்காங், பிரேசில் ஆகிய நான்கு நாடுகளில் மட்டுமே 60 முதல் 70 வரையிலான எண்ணிக்கையில் பரவல் இருந்தபோதே, சென்னை விமான நிலையத்திற்குச் சென்று சம்பந்தப்பட்ட நாடுகளிலிருந்து வருபவர்களைக் கண்காணிப்பதற்கும் அவர்களுடைய மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
உலகில் பல்வேறு நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் மிகப் பரவலாகப் பரவத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக, தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பியா, பிரேசில், நியூசிலாந்து, மொரீசியஸ், ஹாங்காங், சிங்கப்பூர் போன்ற 11 நாடுகளில் அதிகளவில் பரவத் தொடங்கியுள்ளது. இந்த நாடுகளிலிருந்து வரும் பயணிகளை அவர்களுடைய வருகை சம்பந்தமான விவரங்களையும், அனைவருடைய மாதிரிகளையும் எடுத்துப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
பன்னாட்டு விமான நிலையங்களில் தீவிர சோதனை
அந்த வகையில் மதுரை பன்னாட்டு விமான நிலையத்திற்கு, ஆபத்து உள்ள நாடுகளிலிருந்து நான்கு பயணிகளும், கோவை பன்னாட்டு விமான நிலையத்திற்கு, குறைந்த ஆபத்துள்ள நாடுகளிலிருந்து 12 பயணிகளும், திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு, அதிக ஆபத்துள்ள நாடுகளிலிருந்து 663 பயணிகளும், குறைந்த ஆபத்துள்ள நாடுகளிலிருந்து ஒரு பயணியும், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு 11 அதிக ஆபத்துள்ள நாடுகளிலிருந்து ஆயிரத்து 13 பயணிகளும், குறைந்த பாதிப்புள்ள நாடுகளிலிருந்து 169 பயணிகளும் வருகைதந்தனர்.
1,862 பயணிகளுக்குப் பரிசோதனை
ஆக மொத்தம் இன்று ஒரேநாளில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களிலிருந்து அதிக ஆபத்து உள்ள நாடுகளிலிருந்து ஆயிரத்து 676 பயணிகள் வருகைபுரிந்தனர். அவர்களுக்கு 100 விழுக்காடு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. குறைந்த ஆபத்து உள்ள நாடுகளிலிருந்து 186 பயணிகளும் வருகைபுரிந்திருந்தனர்.
அவர்களில் இரண்டு விழுக்காட்டினருக்கு உடல் வெப்ப பரிசோதனை, ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இப்பரிசோதனை முடிவுகள் மேற்கொண்ட ஆயிரத்து 862 பயணிகளில் ஒருவருக்குக்கூட ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்படவில்லை.
அச்சம் வேண்டாம்
ஒமைக்ரான் கிட்டத்தட்ட 30 நாடுகளில் பரவியுள்ளது. பரவும்தன்மை அதிகம் உள்ளதே தவிர, அதன் வீரியம் கேள்விக்குறியாக உள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொண்டால் உயிரிழப்பு தடுக்கப்படுகிறது. எனவே மக்கள் விரைந்து முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். மக்கள் ஒமைக்ரான் குறித்து அச்சப்படத் தேவையில்லை" என்று கூறினார்.
இதையும் படிங்க: ஒமைக்ரான் வகை எவ்வாறு மாறுபடுகிறது? அறிந்து கொள்ளுங்கள்!