சென்னை: தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
ராயபுரம் தொகுதிக்குள்பட்ட பழைய வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவில் பரப்புரையைத் தொடங்கி, பொதுமக்களிடம் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அங்குள்ள உணவகத்திற்குச் சென்று அடுப்பைப் பற்றவைத்து முட்டை உடைத்து, சீன துரித உணவான ஃப்ரைடு ரைசை தானே சமைத்து ருசிபார்த்து அங்கிருந்தவர்களுக்கும் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “வருமானவரித் துறை அரசியல் கட்சி அல்ல; அவர்களுக்கு கிடைத்த தகவலை வைத்துதான் சோதனை செய்கின்றனர்.
மடியில் கனமில்லை என்றால் ஏன் பயப்பட வேண்டும். வருமானவரித் துறை சோதனை செய்வதை, எங்கள் மீது திசைத்திருப்பி அரசியல் ஆதாயம் தேடுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
திமுக கறுப்புப் பணத்தை நம்பியுள்ளது. ராயபுரம் தொகுதி திமுக வேட்பாளர் 100 கோடி ரூபாய் இறக்கப்போவதாக வருமானவரித் துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. தொகுதிக்கு ரூ.100 கோடி செலவுசெய்து, ஜனநாயகத்தைப் பணத்தால் வெல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள். அது மக்களிடம் எடுபடாது” என்று தெரிவித்தார்.