சென்னை : மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் நினைவு தினத்தையொட்டி, சென்னை, காசிமேடு, டோல்கேட் பகுதியிலுள்ள அவரது உருவப்படத்திற்கு தமிழ்நாடு மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “எம்ஜிஆரை உரிமை கொள்வதற்கு எல்லா மக்களுக்கும் உரிமை உண்டு. ஆனால் அவரின் கொள்கைகளைத் தாங்கி நிற்கிற அதிமுகவிற்கு தான் அவரின் ஆசியுள்ளது. எம்ஜிஆரை விமர்சனம் செய்தவர்கள் எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் போய் விட்டார்கள்.
நாம் தமிழர் கட்சி சீமானுக்கு ஏதோ ஒன்று, இரண்டு விழுக்காடு வாக்குள்ளது. எம்ஜிஆரை விமர்சனம் செய்தால் அதுவும் இல்லாமல் போய்விடும். எம்ஜிஆரை விமர்சனம் செய்தால் தமிழ்நாட்டு மக்களாலும் அதிமுக தொண்டர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.
மீனவர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் எதுவும் செய்யவில்லை என்று ஆ.ராசா குற்றச்சாட்டு தெரிவித்திருந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ”இது ஒரு நகைச்சுவை” என்றார். மேலும், மீனவ மானிய புத்தகத்தை நான் அவருக்கு அனுப்பி வைக்கிறேன். அவர் அதைப் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். அரசியலுக்காக பொய்களைக் கூறினால் அது எடுபடாது. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமான்கள் தான் திமுகவினர்” என்றார்.