’பூம் பூம்’ மாடுகள் நமது கலாசாரத்தின் அடையாளம். பசு மாட்டுக்கு ஜிகு ஜிகுவென மின்னும் போர்வை, காலில் கொலுசு, கண்ணாடி ஆகியவைகளை போட்டுவிட்டு குடுகுடுப்பைக்காரர் அந்த மாட்டை தெருத் தெருவாக கூட்டிச் செல்வார். பொதுமக்கள் கூடும் இடத்தில் பாட்டிசைத்தால், அதற்கேற்றவாறு மாடு தலையை மேலும் கீழும் ஆட்டி ஆடும். இதையடுத்து பொதுமக்கள் தங்களது கைகளிலிருக்கும் 10, 20 ரூபாய் நோட்டுகளை மாட்டுக்காரரிடம் அளிப்பார்கள்.
குறிப்பாக இந்த மாடுகளை அறுவடை முடிந்த காலங்களில் கிராமப் பகுதிகளில் காணலாம். ஏனென்றால் அப்போதுதான் கிராமங்களில் அதிகமாகப் பணப்புழக்கம் இருக்கும். நவநாகரிகம் பெருகிவிட்ட இந்தக் காலத்தில் இத்தகைய பூம் பூம் மாடுகளை காண்பதே அரிதாகிவிட்டது. பூம் பூம் மாடுகள் வைத்திருந்தவர்கள் தற்போது வேறு வேலைக்குச் சென்றுவிட்டனர்.
இந்நிலையில், கிராமப் பகுதிகளிலேயே அரிதாகக் காணப்படும் இந்த பூம் பூம் மாடு சென்னை சாந்தோம் பகுதியில் வலம்வந்தது. அப்போது அமைச்சர் ஜெயக்குமாரின் இல்லம் வழியே அம்மாடு வருகையில், அமைச்சர் மாட்டினை நிறுத்தச் சொல்லி அதனிடம் ஆசி வாங்கிக் கொண்டார்.
இது குறித்து அமைச்சர் கூறுகையில், ”மண்ணுக்குக் கீழே தோண்டி எடுத்து கீழடி நாகரிகம் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் வேளையில், நாம் இத்தகைய பூம் பூம் மாட்டுக்காரர்களையும் மறந்துவிடக் கூடாது. இவர்களைக் காப்பதும் ஒன்றுதான், நமது நாகரிகத்தைக் காப்பதும் ஒன்றுதான்” என்றார்.
இவர்களை மறக்கக் கூடாது என்று கூறும் அமைச்சர் ஜெயக்குமார், வருமானத்துக்கு வழியின்றி வேறு தொழிலுக்குச் செல்லும் பூம் பூம் மாட்டுக்காரர்களின் வாழ்வு சிறக்க அவர் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.