சென்னை: எழுவர் விடுதலை தொடர்பாக ஆளுநரைச் சந்தித்து முதலமைச்சர் கடிதம் கொடுத்தது தொடர்பாக அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார்.
அப்போது பேசிய அவர், “முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேர் விடுதலை குறித்து தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எழுவர் விடுதலை என்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உணர்வு என்ற வகையில், ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.
இது குறித்து அதிமுக சார்பிலும், தமிழ்நாடு அரசு சார்பிலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து ஆளுநர் நல்ல முடிவு எடுக்க வேண்டும். 7 பேரையும் விடுவிக்கத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சரின் கருத்துக்களை கவனமாகக் கேட்ட ஆளுநர், தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதும் 7 பேர் விடுதலை குறித்து வலியுறுத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு அரசின் நிலை தெளிவாக இருக்கிறது என்றார்.
ஆனால், திமுக ஆட்சியில் இருந்தபோது அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி நளினியைத் தவிர மற்றவர்களை விடுதலை செய்யக்கூடாது என்று கோப்பில் எழுதி வைத்துள்ளார். ஆனால் ஜெயலலிதா ஒட்டுமொத்தமான தமிழ் மக்களின் உணர்வு என்ற அடிப்படையில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்து பலமுறை வலியுறுத்தியுள்ளார் என்றும் அமைச்சர் ஜெயகுமார் சுட்டிக்காட்டினார்.