மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 26 லட்சம் குடிசைவாழ் மக்களுக்கு மூன்று வேளை விலையில்லா உணவு வழங்கும் திட்டத்தை, சென்னை செனாய் நகரில் உள்ள சமூக நலக்கூடத்தில் தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப்பண்பாடுத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் பேசுகையில், "மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடிசைவாழ் மக்களுக்கு விலையில்லா உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த நேற்று (டிச. 05) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்தார். அது இன்று (டிச. 06) காலை அனைத்து இடங்களிலும் நிறைவேற்றப்பட்டது. 300 இடங்களில் சமையல் செய்யப்பட்டு 800 இடங்களில் வழங்கப்படுகிறது.
அடுத்த ஏழு நாள்களுக்கு எந்தவிதத் தடையுமின்றி இலவசமாக மூன்று வேளையும் உணவு வழங்கப்படும். காலை 8 மணிக்கும், மதியம் 12 மணிக்கும், இரவு 7 மணிக்கும் உணவு வழங்கப்படும். சிலரால் மாநகராட்சி அமைந்த இடத்தில் வந்து சாப்பிட முடியாமல் இருந்தால் அவர்களுக்கு வீட்டுக்கே எடுத்துச்சென்று கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அம்மா உணவகத்தில் வழக்கம்போல் உணவு வழங்கப்படும். இது தனியாக மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும்.
சென்னையில் 23 லட்சம் நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்துள்ளோம். ஒரு காலத்தில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் விகிதம் 37ஆக இருந்தது. தற்போது அது இரண்டாக குறைந்துள்ளது. தமிழுக்கு மற்ற கட்சிகள் செய்ததைவிட எடப்பாடி அரசு அதிகமாகச் செய்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், தியாகராய நகர் சட்டப்பேரவை உறுப்பினர் சத்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர். செய்தியாளர் சந்திப்பு முடிந்தபின் அமைச்சர், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஏழை மக்களுக்கு வழங்கும் விலையில்லா உணவைச் சாப்பிட்டனர்.
இதையும் படிங்க: மணல்மேடு கிராமத்திற்குள் புகுந்த ஆற்றுநீர்: பொதுமக்கள் அவதி