சென்னை: இந்தியாவில் ஜனவரி 13ஆம் தேதி முதல் கரோனா வைரஸ் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், நாடு முழுவதும் இன்று அதற்கான ஒத்திகை நடைபெறுகிறது. சென்னையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தடுப்பூசி போடுவதற்காக நடைபெறும் ஒத்திகையை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நேரில் பார்வையிடுகிறார்.
பின்னர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையை அமைச்சர் பார்வையிடுகிறார். அதனைத் தொடர்ந்து பெரியமேட்டில் உள்ள பொது மருத்துவப் பொருட்கள் சேமிப்பகத்தைப் பார்வையிடும் அமைச்சர், அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள தடுப்பு மருந்து மையத்தையும் நண்பகலில் பார்வையிடுகிறார். பின்னர், செங்கல்பட்டிலுள்ள தடுப்பு மருந்து மையத்தையும், இந்துஸ்தான் பயோ-டெக் லிமிடெட் வளாகத்தையும் அவர் பார்வையிடுகிறார்.
சென்னை பெரியமேட்டில் உள்ள சேமிப்பகம், நம் நாட்டிலுள்ள நான்கு தேசிய தடுப்பு மருந்து சேமிப்பகங்களில் ஒன்றாகும். மும்பை, கொல்கத்தா, கர்னலிலும் இத்தகைய மையங்கள் உள்ளன. நாடு முழுவதுமுள்ள 33 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 736 மாவட்டங்களில் கோவிட்-19 தடுப்பு மருந்துக்கான ஒத்திகை நாளை நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் மாநில அரசின் கிடங்குகளில் 2 கோடி தடுப்பூசிகளும், மத்திய அரசின் கிடங்கில் 2 கோடி தடுப்பூசிகளும் சேமித்து வைப்பதற்கு வசதிகள் உள்ளன. 2850 சேமிப்பு கிடங்குகள் தயார் நிலையில் உள்ளது. மேலும் மாநிலத்தின் 47,200 இடங்களில் தடுப்பூசி போடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளன. இதற்காக 21,000 செவிலியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன.
மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் தடுப்பூசி போடுவதற்கான பணிகள் தீவிரமாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி போட வருபவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில் துண்டுப் பிரசுரங்களும் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளன.
தடுப்பூசி போட வரும் பயனாளிகளின் விபரங்கள் முதலில் பதிவு செய்ய வேண்டும். விபரங்களைப் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஒரு நபர் 30 நிமிடம் காத்திருக்கும் அறையில் காத்திருந்த பின்னர் அனுப்பி வைக்கப்படுவார்.
முதலில் மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.