நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 36 பேருடைய வாகனங்கள் சட்டவிரோதமாக மணல், கனிம பொருள்களை கடத்திய குற்றத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது, நாகப்பட்டின மாவட்ட சிறப்பு நீதிமன்றம், வாகனங்களை திருப்பி கொடுக்க மறுத்து விட்டது.
இந்த மறுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து 36 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அந்த மனுவில், "எங்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. எங்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட டிப்பர் லாரிகள், பொக்லைகள், டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்கள் திறந்தவெளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் மழை, வெளியில் உள்ளிட்ட இயற்கை காரணங்களால் பாழுதடைய வாய்ப்புள்ளது.
எனவே வாகனங்களை திருப்பி ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். விசாரணைக்கு தேவைப்படும்போது, வாகனங்களை ஒப்படைக்க தயாராக உள்ளோம்" எனக் குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பிலிருந்து, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டது.
6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்: இதையடுத்து நீதிபதி, "வாகனங்கள் மீதான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். அதற்கு வாகன உரிமையாளர்கள் உரிய ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். வழக்கை இழுத்தடிப்பு செய்யக்கூடாது என்று உத்தரவிட்டார். மேலும் அவர், நமது தாய் மண்ணை எந்த ஒரு சேதாரமும் இல்லாமல் முன்னோர்கள் நமக்கு கொடுத்துள்ளனர்.
அந்த மண்ணில் வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரிலோ, வேறு எந்த காரணத்தை காட்டியோ பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது. குறிப்பாக நாட்டின் பொக்கிஷங்களாக பாதுகாக்க வேண்டிய கனிம வளங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது. நிலத்தின் மீது ஏற்படுத்தப்படும் எந்த ஒரு பாதிப்பையும் கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்கக் கூடாது. சுத்தமாக ஓடிய ஆறுகள் இப்போது கழிவுநீர் கால்வாயாக உள்ளன. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மணல் கடத்தல் வழக்குகளில் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஹிஜாப் விவகாரத்தில் நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல்... ஜாமீன் மனுக்கள் ஒத்திவைப்பு...