கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. நோய் பரவும் அபாயம் இருப்பதால் கட்டுமானத் தொழில்கள் உட்பட அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால், தமிழ்நாட்டில் தங்கி கட்டுமானத் தொழில் உள்ளிட்டவைகளில் ஈடுபட்டு வந்த வட மாநிலத் தொழிலாளர்கள், வேலை, வருமானமின்றி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கடும் இன்னலுக்கு ஆளாகி வந்தனர்.
மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்ற அறிவிப்பு வந்ததும், பெரும்பாலான வெளிமாநிலத் தொழிலாளர்கள், தங்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும் எனப் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, சிறப்பு ரயில் மற்றும் பேருந்துகள் மூலம் அவர்களைச் சொந்த ஊருக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
அதன் படி, மாநகராட்சி முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த அசாம் மாநிலத் தொழிலாளர்கள் இன்று தனியார் பேருந்து மூலம், சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பேருந்தில் ஏறுவதற்கு முன் தொழிலாளர்களுக்கு, உடல் வெப்ப நிலை சோதனை செய்யப்பட்டது. அதன்பின், பேருந்தில் தனி நபர் இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டு, மாநகராட்சி சார்பாக அவர்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய பையும் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளியான கணவருடன் நடந்தே செல்லும் பெண் - மாவட்ட நிர்வாகம் உதவுமா?