சுதந்திரத்திற்கு முன்பு நீதிக்கட்சியின் தலைவர்களின் ஒருவரான சர்.பிட்டி.தியாகராயர், 1920 ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தின் மேயராக இருந்தார். அப்போது சென்னை மாகாணம் கல்வி அறிவில் பின் தங்கிய நிலையிலிருந்தது. பள்ளிக்கு வரும் குழந்தைகள் பட்டினியோடு வந்து பட்டினியோடே சென்றனர்.
இதனை கண்ட சர்.பிட்டி.தியாகராயர் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் திட்டத்தை ஒன்றை கொண்டு வர வேண்டும் என விரும்பினார். அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பின்னர் 'பகல் உணவு திட்டம்' கொண்டுவரப்பட்டது. இதனால் பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்தது.
இந்த திட்டத்திற்கு அதிக நிதி செலவு ஆகிறது என ஆங்கிலேய அரசு திட்டத்தை 1925-ஆம் ஆண்டு நிறுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நீதிக்கட்சியின் முயற்சியால் மீண்டும் பகல் உணவு திட்டம் செயல்பட்டது. இந்த திட்டம் சென்னையில் மட்டுமே செயல்பட்டு வந்தது.
இதன் தொடர்ச்சியாக சுதந்திர இந்தியாவில் சென்னையின் இரண்டாவது முதலமைச்சராக கர்மவீரர் காமராஜர் பொறுப்பேற்றர். அப்போது கல்வித்துறையின் இயக்குநராக இருந்த சுந்தர வடிவு, பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு உணவு வழங்க திட்டம் கொண்டு வந்தால் குழந்தைகளின் வருகை அதிகரிக்கும் எனக் கருத்து ஒன்றை தெரிவித்தார்.
இந்த கருத்து காமராஜருக்கு செல்ல, கல்வித்துறையின் இயக்குநரை அழைத்து பேசினார். அப்போது தான் முதலமைச்சர் காமராஜர் குழந்தைகளின் நிலைமையை அறிந்து உணவு தரும் திட்டதை கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. அதிகாரிகளுடன் ஆலோசனை செய்கிறார்.
இந்த திட்டத்தை செயல்படுத்த ஒரு வேலை உணவுக்கு ஒரு கோடு செலவு ஆகும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது நிதி அமைச்சராக இருந்த சுப்பரமணியத்திடம் கேட்டும் போது போதிய அளவு நிதி இல்லை எனக் கூறிவிடுகிறார். ஆனால் காமராஜர் எப்படியாவது திட்டத்தை செயல்படுத்திவிட வேண்டும் என நினைத்தார். மக்களிடம் திட்டத்தை எடுத்து கூறினார். நன்கொடை வாங்கலாம் என திட்டத்தை செயல்படுத்த தொடங்கினார். மக்கள் தந்த ஆதரவோடு மதிய உணவு திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
இருந்தாலும் முழுவதும் மக்களிடம் நன்கொடை வாங்குவது சரியாக இருக்காது, கடைசி வரைக்கும் திட்டத்தை செயல்படுத்த சிக்கல் ஏற்படும் என்பதை அறிந்து மதிய உணவு திட்டத்தில் மாநில அரசு 60 சதவீதமும், பொதுமக்கள் 40 சதவீதமும் பங்களிப்போடு திட்டம் செயல்படும் என அறிவிப்பை ஒன்றை வெளியிட்டார்.
அப்போதும் பிற வளர்ச்சி திட்டங்களுக்கு போதிய நிதியை ஒதுக்க முடியாத நிலை இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்தனர். இருந்தாலும் காமராஜர் அதில் சமரசம் செய்து கொள்ளவில்லை. மதிய உணவு திட்டம் கொண்டு வந்ததால் தான் கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர் என இன்று அளவிலும் அழைக்கப்படுகிறார்.
இதன் தொடர்ச்சியாக 1977ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற எம்.ஜி.ஆர், காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தை 1982ஆம் ஆண்டு சத்துணவு திட்டமாக மாற்றம் செய்து செயல்படுத்தினார். இதில் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்குச் சத்தான காய்கறி கொண்ட உணவு வழங்கப்பட்டது.
இதில் பள்ளிக்கு வராத குழந்தைகளுக்கும் குழந்தைகள் வாழ்வு மையம் மூலம் உணவு வழங்கப்பட்டது. இதனால் எதிர்பாராத அளவிற்கு பள்ளிக்கு வரும் குழந்தைகளின் சதவீதம் அதிகரித்தது. முதல் கட்டமாக தமிழ்நாட்டில் 17000 சத்துணவு மையங்கள் திறக்கப்பட்டன. இந்த திட்டத்தை அனைத்து இடங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று சினிமா பிரபலங்கள் பிரச்சாரம் செய்தனர்.
அதிகளவில் சினிமா பிரபலங்கள் நன்கொடை வழங்கினர். அதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ரூ.40,000 வழங்கியுள்ளார். சத்துணவு திட்டத்தை செயல்படுத்த மதுரை, ராமநாதபுரம் ஆகிய இடங்களுக்கு ஜெயலலிதா சென்றிருந்தார். அப்போது அரசு பொறுப்பில் இல்லாத ஜெயலலிதா எப்படி ஆய்வு மேற்கொள்ளலாம் என விமர்சனம் எழுந்தது. இதனை அறிந்த எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை சத்துணவு குழு உயர்மட்ட உறுப்பினராக நியமனம் செய்தார். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தை செயல்படுத்தியதால் இன்று வரை புரட்சி தலைவர், பொன்மன செம்மல் என்று அழைக்கப்படுகிறார்.
எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தை செயல்படுத்திய போது கடுமையாக எதிர்த்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, 1989ஆம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு பள்ளி குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கு ஒரு முட்டை வழங்கப்படும் என அறிவித்தார். பின்னர் அது வாரத்திற்கு ஒரு முறை முட்டை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சத்துணவு திட்டத்தை வளர்த்தெடுத்தனர். தற்போது முதலமைச்சராக இருக்கக்கூடிய மு.க.ஸ்டாலின் பள்ளிகளுக்கு காலை உணவு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இப்படி கல்வி அறிவு சதவீதத்தை உயர்த்திய சத்துணவு திட்டம் என்பது தமிழ்நாட்டு வளர்ச்சியில் பெருமையாக கருதக்கூடிய செயலாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: புதுமணத்தம்பதிகளுக்கு கருத்தடை மாத்திரை வழங்கும் புதிய திட்டம்