சென்னை மாநகராட்சி சார்பில், கிழக்கு கடற்கரையோர பகுதியில் மழைநீர் வடிகால் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சுற்றுச் சூழல் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் சட்ட மீறல் இருப்பதாகவும் கூறிய ஜெர்மன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிக்கேல் ப்ராண்ட், ஹைகே ஹான்செல், காரென் லே, ஈவா மரியா ஸ்க்ரைபர், ஜாக்லின் நாஸ்டிக் ஆகியோர் இந்த திட்டத்துக்கு நிதியுதவி வழங்கிய வளர்ச்சி வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இது தொடர்பாக ஜெர்மன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
"கிழக்கு கடற்கரையோர பகுதியில் மழைநீர் வடிகால் திட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்ற சென்னை மாநகராட்சி முனைந்துள்ளது. சென்னைக்கு "நிலைத்த வகையிலான மழைநீர் மேலாண்மை"ஐ வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கம். இதற்காக 150 மில்லியன் யூரோ நிதியுதவியை கேஎஃப்வி வளர்ச்சி வங்கி வழங்கியுள்ளது. திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கடற்கரை ஒழுங்கமைவு ஒப்புதலை சென்னை மாநகராட்சி பெறவில்லை என்று கருதப்படுகிறது. மேலும், போதுமான அளவு சமூக, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடும் இந்த திட்டத்தில் பின்பற்றப்படவில்லை.
சுற்றுச்சூழல் நிபுணர்களின் கருத்துப்படி, ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளின் இனப்பெருக்க பகுதிகளை பாதிக்கும் வாய்ப்புள்ள திட்டத்துக்கு கேஎஃப்வி வளர்ச்சி வங்கி நிதியுதவி அளிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல். சமூக, பருவநிலை மாற்றம் தொடர்பான மதிப்பீடு செய்வது குறித்த கேஎஃப்வி வளர்ச்சி வங்கியின் சொந்த வழிகாட்டு நெறிகளையே கேஎஃப்வி மீறுகிறது என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. அனுமதியின்றி கட்டுமானம் செய்ய கூடாது என்று இந்திய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்திருந்த போதும், இந்த திட்டத்துக்கான நிதியளிப்பு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக கருத முடிகிறது.
எனவே, எங்களின் கோரிக்கையை பரிசீலித்து இந்த திட்டத்துக்கான கட்டுமானத்தை அல்லது நிதியளிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என இறைஞ்சுகிறோம்" என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.