2012ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான செலவினங்களுக்காக, நிர்பயா நிதியம் என்ற நிதியத்தை மத்திய அரசு உருவாக்கியது. இந்த நிதியத்துக்கு, ஆரம்பக்கட்டமாக ரூ.10 ஆயிரம் கோடி நிதியாக மத்திய அரசு ஒதுக்கியது.
இந்த நிதியம், அனைத்து மாநிலங்களுக்கும் நிதியை ஒதுக்கி வருகிறது. நிர்பயா திட்டத்தின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.190 கோடியில், வெறும் ரூ. 6 கோடி மட்டும் செலவழித்து, மீதமுள்ள தொகையை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பிவிடப்பட்டுள்ளது. இந்த நிதியை, 100 சதவீதம் செலவிடுவதை உறுதி செய்ய உயர் மட்டக் குழு அமைக்க கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, நிர்பயா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்டு, இருப்பில் உள்ள நிதி எவ்வளவு? அந்த தொகை எப்படி செலவிடப்பட்டது? நிர்பயா நிதி ஏன் முழுமையாக பயன்படுத்தவில்லை? என்பன குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கையை நான்கு வாரங்களில் தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட மருத்துவமனைக்குச் சீல் வைக்கத் தடை!