சென்னை: சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஆ. ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "சேலம் மாவட்டம் குகை பகுதியில் உள்ள அம்பலவான சுவாமி கோயிலுக்கு சொந்தமான கல் மண்டபமானது மாவட்டத்தின் முக்கிய திருவிழாக்கள், ஊர்வலங்களின் போது முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த கல் மண்டபம் தற்போது ஆபத்தான நிலையிலும், முறையான பராமரிப்பு இல்லாத நிலையிலும் உள்ளது. கல் மண்டபத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளதாக 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நில நிர்வாக ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து, 2016ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
இருப்பினும், அந்த கல் மண்டபத்தில் ஓய்வு எடுக்கக்கூடிய மக்கள் மேல் இடிந்து விழும் நிலையிலேயே இருப்பது பெரும் அச்சமளிக்கிறது. ஆகவே, கல் மண்டபத்தை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் இன்று (ஜூலை 30) விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு மற்றும் அறநிலையத் துறை சார்பில், இந்த மனு குறித்து மனுதாரருக்கு 8 வாரங்களில் பதிலளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையேற்ற நீதிபதி 2 மாதங்களில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: அயனாவரம் சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக மாற்ற நீதிமன்றம் உத்தரவு