சென்னை: மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படவில்லை என்பது உள்பட பல்வேறு காரணங்களைச் சுட்டிகாட்டி காட்பாடி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்பட்டதை செல்லாது என அறிவிக்கக்கோரி அதிமுக வேட்பாளர் வி. ராமு தேர்தல் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு இன்று (டிச.3) விசாரணைக்கு வந்தது. அப்போது துரைமுருகன் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் ஆஜராகி, "முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தெளிவற்றவை. அதில், எந்தவிதமான உண்மைகளும் இல்லை. அனைத்து குற்றச்சாட்டிற்கும் எந்தவித ஆதாரங்களும் இல்லை. அனைத்தும் பொதுவானவை.
போலி வாக்குகளை நீக்கத் தவறிய வாக்குப்பதிவு இயந்திரத்தில், பதிவான வாக்குகளை விட வேட்பாளர் பெற்ற வாக்கு வித்தியாசம் அதிகமாக இருந்தால், பழுதடைந்த இயந்திரத்தை எண்ண வேண்டியதில்லை" என வாதிட்டார்.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி பாரதிதாசன், இதற்கு அதிமுக வேட்பாளர் ராமு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: அதிமுக உள்கட்சித் தேர்தலுக்குத் தடைவிதிக்கக் கோரி வழக்கு