சென்னை: சமூக வலைதளங்களில் ஆளும் திமுகவுக்கு எதிராக அவதூறு பரப்பியதாக தொடக்கப்பட்ட வழக்கில் மாரிதாஸை கைதுசெய்ய மதுரை தல்லாகுளம் காவல் துறையினர் சென்றனர்.
அப்போது அவர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறி சரவணன் உள்பட 34 பேருக்கு எதிராக தல்லாகுளம் காவல் துறை வழக்குப்பதிவு செய்தது.
மனு தாக்கல்
இந்த வழக்கை ரத்துசெய்யக் கோரி சரவணன் உள்பட 34 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தனர். இந்த மனு, நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல் துறையினரைப் பணி செய்யவிடாமல் தடுக்கவில்லை எனவும், காவல் துறைதான் விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்டதாகவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும், ஆளுங்கட்சியைத் திருப்திப்படுத்தும் வகையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.
நீதிமன்றம் உத்தரவு
காவல் துறையைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் வழக்கை ரத்துசெய்யக் கூடாது எனக் காவல் துறை தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. காவல் துறையின் எதிர்ப்பை நிராகரித்த நீதிபதி, சரவணன் உள்ளிட்டோர் மீதான வழக்கை ரத்துசெய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: Budget 2022: மத்திய பட்ஜெட்டில் உள்ள 10 முக்கிய அம்சங்கள்