சென்னை: கடந்த 2018, 2019, 2020ஆம் ஆண்டுகளில் இரண்டாம் நிலை காவலர்கள், இரண்டாம் நிலை சிறை வார்டன்கள், தீயணைப்புத் துறை வீரர்கள் தேர்வு தொடர்பாக சீருடைப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்புகளை வெளியிட்டது.
இப்பணியிடங்களில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எந்தவித இட ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை என்றும், மூன்றாம் பாலினத்தவர்கள் என்ற அடிப்படையில் விண்ணப்பிக்க அனுமதித்த போதும், சம்பந்தப்பட்ட மூன்றாம் பாலினத்தவர்கள் தங்களை ஆண்கள் என அடையாளப்படுத்திக் கொள்ளும்போது, ஆண்களுக்கான தேர்வு நடைமுறைகள் பின்பற்றப்படும் எனவும், பெண்கள் என அடையாளப்படுத்தும்போது பெண்களுக்கான தேர்வு நடைமுறைகள் பின்பற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை
இதை எதிர்த்தும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வயது வரம்பு சலுகையுடன், எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வுகளிலும், கட்- ஆஃப் மதிப்பெண்களிலும் சலுகைகள் வழங்கக் கோரி சாரதா என்பவர் உள்பட பல மூன்றாம் பாலினத்தவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், 'மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட போதும், எந்த இட ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை' எனக் குறிப்பிட்டுள்ளார்.
8 வாரங்களில் முடிக்க உத்தரவு
மேலும் கூறிய அவர், "பெண்கள் என அடையாளப்படுத்தும் மூன்றாம் பாலினத்தவர்கள், பெண்களுக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால், ஆண்கள் என அடையாளப்படுத்தும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படுவதில்லை" என வேதனை தெரிவித்த அவர், "மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு எந்த தடையும் இல்லை" எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மனுதாரர்கள் அனைவரும் ஆரம்பகட்ட தேர்வு நடவடிக்கைகளில் தகுதி பெற்றதாக கருதி, உடற்தகுதி தேர்வு உள்ளிட்ட பிற தேர்வுகளில் பெண்களுக்கான சலுகைகளை வழங்கி, எட்டு வாரங்களில் தேர்வு நடைமுறைகளை முடிக்க வேண்டும் எனவும் சீருடைப்பணியாளர் தேர்வாணையத்துக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
எதிர்காலத்தில், அரசு பணி நியமனங்களில் சலுகைகள் மட்டுமல்லாமல், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு குறிப்பிட்ட விழுக்காடு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.
இதையும் படிங்க: எதிலும் காதல்... ஆதரவு நாடும் தன்பாலின காதலர்கள்!