சென்னை: திருப்பூர் மாவட்டம், மாணிக்கபுரம் புதூரைச் சேர்ந்த விஸ்வலிங்க சாமி தொடர்ந்துள்ள வழக்கில்,
'2018ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டுறவு சங்கத்தேர்தலின் போது, திருப்பூர் மாணிக்கபுரம் புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க இயக்குநர் பதவிக்கு போட்டியிட விண்ணப்பித்தேன். ஆனால், அப்பதவிக்கு முன்கூட்டியே தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறி தேர்தல் நடைபெறவில்லை.
இதேபோல் தமிழ்நாடு முழுவதும் 95% கூட்டுறவு சங்கங்களுக்கு முறையான தேர்தல் நடத்தாமல், கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த நிர்வாகிகளே தன்னிச்சையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கூட்டுறவு சங்கங்களைப் பொறுத்தவரை 9 ஆயிரம் கோடி அளவிற்கு கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் கடன் மோசடி நடைபெற்றுள்ளது.
ஸ்டாலின் அறிவிப்பால் அதிமுகவினருக்கே பயன்
கடந்த ஆட்சிக் காலத்தில் ஆளுங்கட்சியின் நிர்வாகிகள் தலைவராக இருத்ததால், தங்களுடைய பினாமிகளுக்கு அதிகமாக கடனளித்து, பலன் அடைந்தனர்.
மேலும், தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ள கூட்டுறவு சங்கக் கடன் தள்ளுபடி 11,500 கோடி ரூபாயில் கடந்த ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களே பயன்பெற்றார்கள். எனவே, இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
2 வாரம் ஒத்திவைப்பு
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஜூலை 15) விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுகுறித்து தமிழ்நாடு அரசு உரிய விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: டிசம்பர் மாதத்திற்குள் அதிமுக உட்கட்சித் தேர்தல்: தேர்தல் ஆணையம்