சென்னை: நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ராவிடம் 65 லட்சம் ரூபாய் கடன் பெற்று, இந்த தொகையை தான் திருப்பி தரவில்லை என்றால் ரஜினி தருவார் என்று கூறி கடிதம் எழுதியதாக தெரிகிறது.
இந்த நிலையில், தனது பெயரை தவறாக பயன்படுத்திய கஸ்தூரி ராஜாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி ரஜினிகாந்த்துக்கு உத்தரவிடக்கோரி, முகுந்த் சந்த் போத்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பெயரை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்தான் வழக்கு தொடர வேண்டுமே? தவிர நீதிமன்றம் ஒருவரை வழக்கு தொடர உத்தரவிட முடியாது என கூறி மனுதாரருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, வழக்கை தள்ளுபடி செய்தார்.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து முகுந்த்சந்த் போத்ரா மரணமடைந்துவிட்டதால், அவரது மகன் ககன்போத்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மேல்முறையீடு வழக்கு நீதிபதிகள் துரைசாமி, நீதிபதி தமிழ்செல்வி அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணையின்போது, கஸ்தூரிராஜா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் காஜாமொய்தீன் கிஸ்தி, ரஜினிகாந்த் பணத்தை திரும்ப தருவார் என்ற கடிதமே போலியானது. எந்த வித பணமும் தரவேண்டியது இல்லை என வாதிட்டார்.
இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையின்போது மனுதாரர் தொடர்ந்து மூன்று முறைக்கு மேல் ஆஜராகவில்லை என்றும், வழக்கை நடத்துவதில் ஆர்வம் காட்டாமல் இழுத்தடித்து, நிலுவையில் வைப்பதையே நோக்கமாக கொண்டுள்ளதால், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் அதிகபட்ச மின் நுகர்வு.. வரலாற்றில் புதிய உச்சம்...