சென்னை: கூட்டுறவுச் சங்கங்களின் இளநிலை உதவியாளர் முதல் உதவி பதிவாளர் பணியிடங்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக மாநில அளவிலான கூட்டுறவுப் பயிற்சி நிலையத்தை சேலம் மாவட்டம் ஏற்காடு வட்டத்தில் உள்ள செம்மடுவு கிராமத்தில் 4.33 ஏக்கரில் 61 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க அதிமுக ஆட்சியில் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கூட்டுறவுத் துறை அரசாணை பிறப்பித்து கட்டுமான பணிகளும் தொடங்கப்பட்டன.
இரு வழக்குகள்
பின்னர் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு, ஏற்காட்டிற்குப் பதிலாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள மன்னவனூர் கிராமத்தில் தேசிய அளவிலான கூட்டுறவு மேலாண்மைப் படிப்பு மற்றும் பயிற்சி நிறுவனத்தை அமைப்பது என கடந்த ஆகஸ்ட் மாதம் முடிவெடுக்கப்பட்டு, ஏற்கனவே நடைபெற்றுவந்த ஏற்காடு பயிற்சி நிலைய கட்டுமான பணிகளை நிறுத்தும்படி கூட்டுறவுத் துறை உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்துசெய்து, ஏற்காடு மலைவாழ் மக்கள் பெரும் பல்நோக்கு (லேம்ப் - LAMP) கூட்டுறவுச் சங்கத்தின் தலைவரான ஜி. சென்றாயன் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். இதேபோல கொடைக்கானலில் மையம் அமைப்பதற்காக வெளியிடப்பட்ட அரசாணையை எதிர்த்து மற்றொரு வழக்கும் தொடர்ந்திருந்தார்.
கொள்கை முடிவுக்கு ஆதாரமில்லை
இந்த இரு வழக்குகளும் நீதிபதி ஆர். சுரேஷ்குமார் முன்பு நேற்று (நவம்பர் 26) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சங்கம் தரப்பில் முன்னிலையான மூத்த வழக்கறிஞர் பி.ஹெச். அரவிந்த் பாண்டியன், "சேலம் மாவட்டத்தில் மையத்தை அமைக்க ஆய்வு நடத்தப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன.
பின்னர், திடீரென கடந்த ஜூலை மாதம் முதலமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டன. அதன் பின்னர் தேசிய அளவிலான பயிற்சி நிறுவனம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.
முதலில் சேலத்தில் கட்டுமானங்களை நிறுத்த உத்தரவிட்டுவிட்டு, அதன் பின்னர்தான் கொடைக்கானலில் அமைக்கவுள்ள புதிய மையத்திற்கு அரசாணை வெளியிடப்பட்டது. கொள்கை முடிவெடுக்கப்பட்டதாகக் கூறும் நிலையில், கொள்கை முடிவு எடுக்கப்பட்டதற்கான ஆதாரங்களே இல்லை.
சட்டப்பேரவையில் முன்வைக்கப்பட்டது
நீதிமன்றத்தில் அரசு தாக்கல்செய்துள்ள அறிக்கையிலும்கூட சேலத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த கட்டுமானங்கள் ஏன் நிறுத்தப்பட்டன என்பதற்கான காரணங்களுக்கு விளக்கம் அளிக்கப்படவில்லை. தேசிய அளவிலான பயிற்சி நிறுவனம் அமைப்பதில் ஆட்சேபனை இல்லை. ஆனால், அதற்காக மாநில அளவிலான பயிற்சி மையத்தை முடக்க வேண்டிய அவசியம் என்ன?" எனக் கேள்வி எழுப்பினார்
மறுதரப்பில், தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம் முன்னிலையாகி, "தேசிய அளவிலான மையத்தை 20 ஏக்கர் பரப்பளவில் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுவது எனக் கொள்கை முடிவெடுக்கப்பட்டு, சட்டப்பேரவையில் முன்வைக்கப்படது" எனப் பேசினார்.
தொடர்ந்து, தேசிய அளவிலான பயிற்சி நிறுவனம் அமைக்க அரசு கொள்கை முடிவு எடுத்ததாக கூறப்படும் ஆவணங்கள், அரசாணை தொடர்பான ஆவணங்களைத் தாக்கல்செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை டிசம்பர் 3ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.