சென்னை: கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமானது மெட்ரோ ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும், இல்லையெனில் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என பத்திரிகை செய்திக் குறிப்பில் அறிவுறுத்தியது.
இதனை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், 'தமிழ்நாடு அரசு பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கும் வகையில் சட்டம் இயற்றியுள்ளது.
அந்த சட்டத்தை அமல்படுத்த அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மெட்ரோ ரயில் நிறுவனம் தனது அறிவிப்பை அமல்படுத்துவதற்கான அலுவலர்கள் எவரையும் குறிப்பிடவில்லை. செப்டம்பர் 13ஆம் தேதி வரை 87ஆயிரம் ரூபாய்க்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையை மாநில கருவூலத்தில் செலுத்த வேண்டும்' என வாதிடப்பட்டது.
வழக்கை ரத்து செய்த நீதிபதிகள்
மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மெட்ரோ ரயில் சட்டப்படி இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் நாட்டிலுள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிறுவனங்களும் இந்த அபராதத்தை விதிப்பதாகவும் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அறிவிப்பு நல்ல நோக்கமாகவும், பொது நலனைக் கருத்தில் கொண்டு இருந்தாலும்கூட, அதற்கு சட்டத்தில் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என்றும்; சட்ட அதிகாரம் பெறாத இந்த அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது எனவும் உத்தரவிட்டனர்.
ஏற்கெனவே வசூலித்த அபராதத் தொகையை மெட்ரோ ரயில் நிறுவனம் வைத்துக் கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: அம்மா உணவகங்களில் ஜெயலலிதா படம் வைக்க கோரிய வழக்கு தள்ளுபடி