சென்னை: தென்மேற்குப் பருவக்காற்று, வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக இன்று (செப்டம்பர் 29) சேலம், தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தென்மேற்குப் பருவக்காற்று, வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு - புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழையும், சேலம், தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.
இந்த மாவட்டங்களுக்கெல்லாம் கன மழை
நாளை தமிழ்நாடு - புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.
நாளை மறுநாள் தமிழ்நாடு - புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, தென்காசி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34, குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
வங்கக்கடல் பகுதிகள் இன்று தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்" எனக் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: 'ரூ.1000 கோடி மதிப்பிலான கோயில் ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்பு'