செங்கல்பட்டு: மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடம் நீர்நிலையை ஆக்கிரமித்ததாகவும், அதனை மீட்கக் கோரியும் தொடரப்பட்ட வழக்கில் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த சோத்துபாக்கம் பகுதியில் 'கீழ் மருவத்தூர்' ஏரி இருந்துவந்தது. 2015ஆம் ஆண்டு முதல் இந்த ஏரி தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, அதே பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டு பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார்.
நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி அமர்வு
கடந்த முறை, இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்த நிலை அறிக்கைத் தாக்கல்செய்ய உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் குறிப்பிடும் பகுதியில் உள்ள அரசு நிலங்களில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள், அரசு அலுவலகங்கள், ரயில் பாதைகள் உள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த இடத்தில் ஒரு பகுதியை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆக்கிரமித்து கட்டடங்கள் எழுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வழக்கு விசாரணை
கடந்த அதிமுக ஆட்சியில்தான் இந்தப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் நடைபெற்றதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஆட்சிகள் மாறினாலும் அலுவலர்கள் மாறவில்லை என்பதால் ஆக்கிரமிப்பை அனுமதித்த அலுவலர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.
மேலும், இந்த வழக்கில் ஏற்கனவே 2018ஆம் ஆண்டு அப்போதைய அரசு, நிலை அறிக்கை தாக்கல்செய்திருந்தாலும், தற்போது எடுக்க உள்ள நடவடிக்கை தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்து வழக்கைத் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: Nannilam Flood: வாஞ்சியாற்று உடைப்பால் பயிர்கள் சேதம் - விவசாயிகள் வேதனை