சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது குறிப்பாக கடந்த ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி அன்று முதல் தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போட தொடங்கப்பட்டது.
அதற்குப் பின் படிப்படியாக 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் என தற்போது 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதேபோல, 15-18 வயதுடையவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியும், 12-14 வயதுடையவர்களுக்கு கோர்பேவாக்ஸ் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தடுப்பூசி போடும் பணி தொடங்கிய காலத்தில் பொதுமக்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லாததால் தடுப்பூசி போடும் பணி பின்னடைவில் இருந்தது. மேலும், அந்த காலகட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டது.
அதில் குறிப்பாக, அனைத்து அரசுத் தலைமை மருத்துவமனைகளிலும் 24 மணி நேர தடுப்பூசி முகாம், வார இறுதி நாள்களில் மெகா தடுப்பூசி முகாம் போன்ற திட்டத்தை அரசு கொண்டு வந்தது. மேலும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டு 6 மாதங்கள் நிறைவு பெற்ற 60 வயதிற்கு மேற்பட்ட முன் களப்பணியாளர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியும் தொடங்கப்பட்டது.
மேலும் பூஸ்டர் டோஸ் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக வாரம்தோறும் வியாழக்கிழமைகளில் அதற்கு சிறப்பு முகாம் அமைக்கப்பட்டது. மேலும், தற்போது 18 வயது நிரம்பியவர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட அனைவருக்கும் தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
மாதம் ஒருமுறை மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்துவதற்கு திட்டமிட்டு இன்று (ஜூலை-10) தமிழ்நாடு முழுவதும் 31ஆவது மெகா தடுப்பூசி முகாம் ஒரு லட்சம் இடங்களிலும், சென்னையில் மட்டும் 3ஆயிரத்து 300 இடங்களிலும் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக அனைத்து மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என பொதுமக்கள் அதிகமாக கூட கூடிய அனைத்து இடங்களிலும் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் அமைப்பதற்காக சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. மேலும், காலை 7 மணிக்கு தொடங்க இருக்கும் இந்த மிகப்பெரிய முதல் இரவு 7 மணி வரையிலும் நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் புதிதாக 2,671 கரோனா பாதிப்பு