தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்திற்கு மத்தியப் பிரதேச மாநிலத்தின் மருத்துவக் கல்வி, போபால் விஷவாயு விபத்து உதவி மற்றும் மறுவாழ்வுத் துறை அமைச்சர் விஸ்வாஸ் சாரங் இன்று (டிச. 07) வருகைதந்தார். அவரை தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷய்யன் வரவேற்றார்.
பின்னர் துணைவேந்தர், பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஆராய்ச்சிகளுக்கான ஆய்வகங்கள், துறைகள், பிரிவுகள் ஆகியவற்றைக் காண்பித்து அவற்றின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.
மேலும், இப்பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இணைப்புக் கல்லூரிகள், அவற்றில் நடத்தப்படும் பாடப்பிரிவுகள் உள்ளிட்ட விவரங்களையும் தெரிவித்தார்.
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் மாணவர்களுக்குத் தேர்வு நடத்தும் முறைகள் குறித்தும், கேள்விகளைத் தயாரித்து ஆன்லைன் மூலம் அனுப்புவது குறித்தும், அதன் பாதுகாப்பு, அவற்றை அனுப்புவதற்கான முறைகள் குறித்தும் விளக்கமாக கூறினார்.
தேர்வு அறையில் மாணவர்கள் தேர்வினை எழுதி அதைக் கண்காணிக்கும் முறை, விடைத்தாள்களைத் திரும்பப் பெறுவது விடைத்தாள் திருத்துவற்கான புதிய முறைகள் குறித்தும் விளக்கினார்.
மாணவர்களைவிட தொலை ஆன்லைன் முறையில் திருத்துவதற்கான முறைகள் குறித்தும் எடுத்துக் கூறினார். பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு, பேரவைக் குழு, நிதிக்குழு பாடத்திட்டங்கள் வகுக்கும் குழு ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும் தெளிவாக கூறினார்.
கரோனா தொற்றுநோய் ஆராய்ச்சி முறைகள், சித்த மருத்துவத்தின் மூலம் கரோனாவிற்கு சிகிச்சை அளித்தல், நோய் எதிர்ப்புச் சக்திக்கு அளிக்கப்படும் கபசுரக் குடிநீர் குறிக்கும் விளக்கி கூறினார்.