சென்னை: விசாரணையின் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், காவல் அலுவலர்ளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
விசாரணையின் போதும், போலீஸ் காவலின் போதும் காவல்துறையினர் விதிகளை மீறி நடப்பதாகவும், அதே போல் வழக்குகளின் போது பறிமுதல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்களை முறையாக பராமரிப்பதில்லை எனவும் புகார்கள் தொடர்ந்து வருவதால், அனைத்து கூடுதல் ஆணையர்கள், இணை, துணை ஆணையர்கள், விசாரணை அலுவலர் மற்றும் மேற்பார்வை அலுவலரிடம் இந்த சுற்றறிக்கையை பின்பற்றுமாறு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
குறிப்பாக கைதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் பணம், தங்கம், சொத்துகள் உள்ளிட்ட தகவலை முறையாக விசாரணை அலுவலர் பதிவு செய்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நபரிடம் பறிமுதல் செய்யப்பட்டதற்கான ஒப்புதல் சீட்டை பெற்றிருக்க வேண்டும்.
விசாரணை கைதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை form 91-யை பூர்த்தி செய்து தாமதமில்லாமல் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.
மேலும் வழக்கு தொடர்பாக நீதிமன்றம் சொத்துக்களை விசாரணை அலுவலரிடம் கொடுத்தால், அதனை ஆவணப்படுத்தி வழக்கு கோப்பில் பதிவு செய்ய வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை நீதிமன்றம் உரிய நபரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டால், அது குறித்தான ஆதாரங்களை முறையாக சரி பார்த்து வழங்க வேண்டும். வழக்கு விசாரணையின் போது சம்பந்தப்பட்ட விசாரணை அலுவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வேறு விசாரணை அலுவலர் நியமிக்கப்படும் போது அவர் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை நேரில் பார்வையிட்டு தங்கம் போன்றவைகளை எடை மதிப்பிட்டு பார்க்க வேண்டும்.
விசாரணையின் போது எந்த விதமான தவறும் இனி ஏற்படாதபடி சொத்து ஆவணங்களை மேற்பார்வையிட்டு மாதத்திற்கு ஒரு முறை விளக்கம் அளிக்கும்படி மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர், 2 காவலர்களை நியமித்து கண்காணிக்க வேண்டும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதை அனைத்து கூடுதல் ஆணையர்களும், இணை ஆணையர்களும், துணை ஆணையர்களும் விசாரணை அலுவலருக்கு தெரிவித்து முறையாக பின்பற்ற வைப்பதோடு கண்காணிக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டெங்கு தடுப்பு: மாநகராட்சிக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!