விடுதலைப் புலிகள் மீதான தடையை விசாரிக்க அமைக்கப்பட்ட டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சங்கீதா திங்ரா சேகல் தலைமையிலான அமர்வு, சென்னை வாலாஜா சாலையிலுள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நேற்றும் இன்றும் விசாரணை மேற்கொண்டது. இதில் மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ பங்கேற்று தன் கேள்விகளை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விடுதலைப் புலிகள் மீதான தடை 1992ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வருகிறது. 2014ஆம் ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகளாகத் தடை மாற்றப்பட்டு, தற்போது டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சங்கீதா சேகல் தலைமையில் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு, அதுகுறித்து விசாரணை இன்று நடைபெற்றது. உங்களுக்கு இந்தி தெரிந்ததால் அதில் கருத்து தெரிவிக்கலாம். நான் பதிவு செய்து கொள்வேன் என்று அவர் தெரிவித்தார். இது தமிழ்நாடு இந்தி தெரிந்தாலும் அதில் கருத்துச் சொல்ல முடியாது என்று கூறினேன்.
அவர் சிரித்துக்கொண்டு தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பதிவு செய்யுங்கள் என்று கூறினார். வழக்கு முடிவில் என் முழு தரப்பு வாதங்களைத் தெரிவிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் க்யூ பிரிவு காவல் அலுவலர்களின் சாட்சிகளை இன்று பதிவு செய்தார். ஆனால் அதற்கான ஆவணம் இல்லாத காரணத்தால், அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆனால் அதை சம்ர்பிக்க இன்னொரு நாள் ஒதுக்க வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார்.
அக்டோபர் 11 முதல் 14 வரை நடக்கவிருக்கும் அடுத்தகட்ட விசாரணை மதுரையில் வைத்துக்கொண்டால் நன்றாகவிருக்கும் என்று நான் கேட்டுக்கொண்டேன். அதை மத்திய அரசு தரப்பு வழக்கறிஞரும் ஒப்புக்கொண்டதால் அதை ஏற்றுக்கொண்டார்கள். எனவே அடுத்த விசாரணை மதுரையில் நடைபெறவுள்ளது. இதற்கு முன் மூன்று தீர்ப்பாயத்தைப் பார்த்துவிட்டேன். ஈழத் தமிழர்களுக்காக என் கடமையைச் செய்து வருகிறேன்.
அதுமட்டுமின்றி, விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, அது நிலுவையில் உள்ளது. உயர்நீதிமன்றம் பின் உச்சநீதிமன்றம் சென்று இந்த தடையை உடைக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதனால் தான் தொடர்ந்து என் கருத்தைப் பதிவு செய்து வருகிறேன். விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கப் பாடுபட்டுக் கொண்டிருப்பவன் நான் மட்டுமே. மற்றவர்களை குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.