மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, ஆட்சிமன்ற குழு செயலாளர் டி.ஆர்.ஆர் செங்குட்டுவன், மாவட்டச் செயலாளர்கள் ஜீவன், சுப்பிரமணி, மகேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலும், 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை தங்கள் கட்சியின் வேட்பாளராக நினைத்து நேரம் ஒதுக்கி பரப்புரை செய்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவிக்க வந்தோம்.வெற்றி வாய்ப்பு நூற்றுக்கு நூறு விழுக்காடு பிரகாசமாக உள்ளது என்பது எங்கள் கணிப்பு.
வேலூர் மக்களவை தொகுதிக்கு தேர்தல் நடத்தாமல் ஆம்பூர், குடியாத்தம் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தியது தேர்தல் ஆணையத்தின் ஒருதலைபட்சமான முடிவு. ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலுர், அரவக்குறிச்சி ஆகிய நான்கு தொகுதிகளுக்கு நடக்க இருக்கும் தேர்தல் குறித்து ஸ்டாலினுடன் ஆலோசித்தோம்.
விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கைப்படி பொன்பரப்பி பகுதியிலும் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும். கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பொன்னமராவதி பகுதியில் அமைதி நிலவ அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்” என்றார்.