சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேருவதற்கு விரும்பிய கல்லூரிகளைத் தேர்வுசெய்த 6,082 மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் இன்று (பிப்ரவரி 8) முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
தமிழ்நாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேருவதற்கு தங்களின் விருப்பங்களைப் பதிவுசெய்துள்ளனர்.
இதற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 அரசு மருத்துவக் கல்லூரிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு இன்றுமுதல் 10ஆம் தேதிவரை ஆறாயிரத்து 82 பேருக்கு நேரில் தேர்வு நடைபெற்றது.
சான்றிதழ் சரிபார்ப்பு
இதற்கான ஏற்பாடுகளை மருத்துவக் கல்வி இயக்குநரகம் மருத்துவக் கல்லூரிகள் மூலம் செய்திருந்தது.
சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் இன்றும் நாளையும் 200 மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடைபெற உள்ளன.
மாணவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்யப்பட்டு மாணவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் சான்றிதழ்களை அலுவலர்கள் விரிவாக ஆய்வுசெய்து சரிபார்த்தனர்.
இணையதளத்தில் பதிவேற்றம்
இது குறித்து சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் ஜெயந்தி கூறும்போது, "மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் வழிகாட்டுதலின்படி அடிப்படையில் மாணவர்களின் சான்றிதழ்கள் உண்மைத் தன்மையை சரிபார்க்கப்படுகிறது.
மேலும், அவர்களின் அசல் சான்றிதழ்களைப் பெற்று மருத்துவக் கல்லூரியில் வைத்துக் கொண்டுள்ளோம். சான்றிதழ்கள் சரிபார்த்தல் விவரத்தை உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்கிறோம்.
சான்றிதழ் சரிபார்ப்பிற்கு மாணவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தந்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.
பதிவிறக்கம்
மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்த பின்னர் அவர்களுக்கான தற்காலிக கல்லூரி ஒதுக்கீடு பிப்ரவரி 15ஆம் தேதி அறிவிக்கப்படும் மருத்துவக் கல்வி இயக்குநரகம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
மேலும், வருகிற 16ஆம் தேதிமுதல் மாணவர்கள் ஒதுக்கீட்டு ஆணையைப் பதிவிறக்கம் செய்து 17ஆம் தேதிமுதல் 22ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரியில் சேர வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாம் தமிழரைவிட ஒரு ஓட்டு கூடுதலாக வாங்கினால் பாஜக பெரிய கட்சி என ஏற்றுக்கொள்கிறேன் - சீமான்