சென்னை: (Madhar Sangam criticize government) பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு காவல் துறையினர் செயல்படுவதாகவும், ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை எனவும் அனைத்திந்திய மாதர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மசூதி தெருவில் உள்ள மாதர் சங்கத்தின் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அனைத்திந்திய மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சுகந்தி கூறியதாவது,
"கரோனா ஊரடங்கு காலத்தில் பெண்கள் வேலை இழந்து கடன் சுமையில் தவித்து வருகின்றனர். அரசின் இலவசங்கள் பெண்களுக்கு முறையாகச் சென்றடையவில்லை.
கடனுக்கு அதிக வட்டி
தேசிய வங்கிகளிடம் 7% வட்டியில் நுண்நிதி நிறுவனங்கள் கடனைப் பெற்று, பெண்களுக்கு 27% வட்டிக்குத் தருகின்றன. இதனைத் தவிர்க்க தேசிய வங்கிகள் நேரடியாக சிறுகடன்களைப் பெண்களுக்கு நேரடியாக வழங்க வேண்டும்.
ஊரடங்கிற்கு முன்பு 5000 ரூபாய்க்கு குறைவாக ஊதியம் பெற்ற பெண்களின் எண்ணிக்கை 20%ஆக இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 42%ஆக அதிகரித்துள்ளது.
நுண்நிதி நிறுவனங்களைக் கண்காணிக்க மாவட்ட ரீதியாக ஒரு அலுவலர் வேண்டும். இந்த நிறுவனத்தின் முறையற்ற நிர்வாகத்தின் காரணமாகப் பல பெண்கள் இறந்துள்ளனர். பலர் தற்கொலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு காவல் துறையினர் செயல்படுவதாகவும் 'ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை' என்பது போல் உள்ளது.
தமிழ்நாடு அரசின் பாதுகாப்புக் கொள்கை
தமிழ்நாடு அரசுப் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக் கொள்கை ஒன்றை உருவாக்க உள்ளனர். அதற்காக எங்கள் கருத்துகளைத் தெரிவித்து உள்ளோம். விரைவில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாதர் சங்கத்திற்கு வரும் அனைத்து பிரச்னைகளையும் கையில் எடுத்து அதற்கான தீர்வினை மாதர் சங்கம் காண்பித்துள்ளது" எனக் கூறினார்.
இதையும் படிங்க:நிலத்தரகர்களை அமைப்புசாரா தொழிலாளர்களாக அறிவியுங்கள் - திருமாவளவன் வேண்டுகோள்