மத்திய பாஜக அரசால் கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டெல்லி, அஸ்ஸாமில் பற்றிய போரட்டத்தீ பல்வேறு மாநிலங்களிலும் பரவியுள்ளது. இச்சட்டம் இஸ்லாமியர்கள், ஈழத்தமிழர்களுக்கு எதிராக இருப்பதாக தமிழ்நாட்டிலும் நாள்தோறும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
கல்லூரி மாணவர்கள், அரசியல் கட்சிகள் என அனைத்துத் தரப்பினரும் குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்த பாஜக அரசை கடுமையாக விமர்சித்துவருகின்றனர். சென்னையில் லயோலா கல்லூரி, ஐஐடி தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், சென்னை பல்கலைக்கழகம், புதுக்கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, கவின் கலைக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று பல்வேறு மாணவர்கள், பெண்கள், திருநங்கைகள், இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றிணைந்து குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு இயக்கம் என்ற பெயரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காவல் துறையினர் அனுமதி மறுத்திருந்த இக்கூட்டத்தில் பதாகைகளை ஏந்தியவாறு திரளானோர் பங்கேற்றனர். அப்போது, குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் மோடி, அமித் ஷா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரை எதிர்த்தும் தமிழ், மலையாளம், ஆங்கிலம், இந்தி மொழிகளில் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில் பங்கேற்று பேசிய பல்வேறு தரப்பினரும், மதச்சார்பற்ற நாடான இந்தியாவை ஒரே ஒரு மதத்திற்கான நாடாக மாற்றுவதாக இக்குடியுரிமை திருத்தச் சட்டம் அமைந்துள்ளது எனக் குற்றஞ்சாட்டினர்.
இச்சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம் தமிழ்நாடு அரசு பெரும் பாவத்தை செய்துள்ளதாகவும் மேற்கு வங்கம், கேரள அரசுகள் போல் இச்சட்டத்தினை அமல்படுத்த மாட்டோம் எனக்கூறி எடப்பாடி அரசு அப்பாவத்தினைப் போக்கிக் கொள்ளவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
இப்போராட்டத்தில் கலந்துகொண்ட திரைக்கலைஞர் சித்தார்த், ”குடியுரிமைச் சட்டம் கண்டிப்பாக ரத்து செய்யப்பட வேண்டும். இந்தப் போராட்டம் அமைதியான வழியில் முன்னெடுக்கப்பட வேண்டும். அது காவல் துறையின் கையில்தான் உள்ளது.
ஏனென்றால், ஜல்லிக்கட்டு, டெல்லி போராட்டங்களில் காவல் துறையே வாகனங்களை தீயிட்டுக் கொளுத்தும் காட்சிகளை நாம் பார்த்திருக்கிறோம். அதுபோல எதுவும் இங்கே நடந்துவிடக் கூடாது. போராட்டம் செய்வதற்கு யாருக்கும் உரிமையுண்டு. அதைத் தடுக்கத்தான் யாருக்கும் உரிமையில்லை ” என்றார்.
பிற்பகல் மூன்று மணிக்குத் தொடங்கிய இப்போராட்டம் இரவு வரை நீண்டது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் வந்து போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
நாட்டில் அமைதியை சீர்குலைக்க முயற்சி - அமித் ஷா குற்றச்சாட்டு