உலகம் முழுவதும் கரோனா வேகமாக பரவி வரும் சூழலில், இந்தியாவில் அதன் தாக்கத்தை குறைக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.
இந்நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமர் மற்றும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் நிதி அளித்து வருகின்றனர்.
அந்தவகையில், தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக 3 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், " மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்புப் பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஓய்வூதியத்தை அளிப்பது என தீர்மானித்ததன் அடிப்படையில் 3 லட்சத்து 65 ஆயிரத்திற்கான காசோலையுடனான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு சுடரஞ்சலி - முத்தரசன்