சென்னை: இன்று (மார்ச்.25) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்:
"மருத்துவக் கல்வியில் நீட் தேர்வை மத்திய அரசு கட்டாயப்படுத்தியுள்ளது. இதனால் பாதிக்கப்படும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் நிறைவேற்றியது.
இதேபோன்று புதுச்சேரி அரசு, அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 10 சதவிகித இட ஒதுக்கீட்டினை வழங்கி தீர்மானம் நிறைவேற்றியது. இத்தீர்மானத்திற்கு அப்போதைய துணை நிலை ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார். முன்னதாக 10 சதவிகித இடஒதுக்கீட்டை புதுச்சேரியில் அமலாக்க வேண்டுமென ஒரு மாணவி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இவ்வழக்கில் மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், மருத்துவக் கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது சட்ட விரோதம் எனவும், இதனால் திறமையான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள், இத்தகைய இட ஒதுக்கீடு நீட் தேர்வு அடிப்படைக்கே விரோதமானது என்பதால் இந்த இட ஒதுக்கீட்டை நிராகரிக்கிறோம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டிலும் நீட் தேர்வு அமலாகியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டு அமலாகி வருகிறது. இது தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன. இந்நிலையில், மத்திய அரசு, புதுச்சேரி வழக்கில் மேற்கொண்ட அதே அணுகுமுறையினையே இவ்வழக்கிலும் மேற்கொள்ள வாய்ப்புள்ளதால், தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ள 7.5 சதவிகித இடஒதுக்கீடு பறிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அணுகுமுறை வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.
மருத்துவப் படிப்பில் ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட, பின்தங்கிய வகுப்புகளைச் சார்ந்த மாணவ, மாணவியர்களின் கல்வி உரிமையை தட்டிப்பறிக்கும் இந்த அணுகுமுறையை மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வருவது கொடுமையானதாகும். சமூக நீதி கோட்பாட்டிற்கும் முழு விரோதமானதாகும்.
இத்தகைய கொள்கை கொண்டுள்ள பாஜகவுடன், அதிமுக கூட்டணி சேர்ந்துள்ளது தமிழ்நாடு மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும். இக்கூட்டணிக்கு தமிழ்நாடு, புதுச்சேரி வாக்காளர்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள் என்பது திண்ணம்.
நீட் தேர்வு இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க அனைவரும் போராட முன்வர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்திக்கோ, இந்துவுக்கோ விரோதி திமுக அல்ல!