இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நாகை மாவட்டம், சீர்காழி வட்டம், மாதானம் பகுதியிலிருந்து தரங்கம்பாடி வட்டம் மேமாத்தூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு சொந்தமான விளைநிலங்களில் அவர்களின் ஒப்புதல் இல்லாமல் நெல், பருத்தி உள்ளிட்டு பயிரிடப்பட்ட வயல்களில் ராட்சத இயந்திரங்களை இறக்கி எரிவாயு குழாய் பதிக்கும் பணியில் கெயில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இரணியன் உள்ளிட்ட எட்டு விவசாயிகள் மீது பிணையில் வெளிவர முடியாத கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.
கொச்சியிலிருந்து மங்களூர் வரை தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்டங்களின் விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிப்பதை அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்து, மாற்று வழியில் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென்றும், பதித்த குழாய்களை அப்புறப்படுத்த வேண்டுமென்றும் உத்தரவிட்டார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு தமிழ்நாடு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படாமல் தனது ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள, மத்திய பாஜக அரசுடன் தமிழ்நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் அனைத்து மக்கள் விரோத திட்டங்களையும் செய்துவருகிறது.
எனவே விளை நிலத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ராட்சத இயந்திரங்களை உடனடியாக அப்புறப்படுத்திட வேண்டும், சிறையிலடைக்கப்பட்டுள்ள விவசாயிகள் அனைவரையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்து, அவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டுமென்றும், அழிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.